ஜனாதிபதி உரை-மதிமுக எம்பியால் பரபரப்பு

15வது மக்களவை அமைந்ததைத் தொடர்ந்து இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இன்று பிரதீபா பாட்டீல் உரையாற்றினார். அதில் மத்திய அரசின் திட்டங்களை அவர் அறிவித்தார். அவரது உரை:
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும். பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
மத்திய அரசுப் பணிகளில் மகளிருக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மகளிருக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க தனி தேசிய ஆணையம் ஏற்படுத்தப்படும்.
கங்கை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நதிகளை தூய்மைப்படுத்தி, அழகுப்படுத்தும் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்த தன்னார்வ இளைஞர்கள் அமைப்பு உருவாக்கப்படும்.
பஞ்சாயத்து ராஜ் நிர்வாகிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் நிர்வாக பயிற்சி வழங்கப்படும்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட செயலாக்கம் ஒளிவு மறைவின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிரவாதம் விஷயத்தில் மிக விழிப்புடன் இந்த அரசு செயல்படும். தீவிரவாதத்தை ஒடு்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்தை வேறறுக்கும் வகையில் பாகிஸ்தானுடனான உறவு பேணப்படும். சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்படும்.
நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ 3 என்ற விலைக்கு வழங்கப்படும். இதற்காக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.
சமூக தணிக்கை மேற்கொள்ளவும், குறைகளைக் களையவும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.
அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பொது மக்களுக்கு வழங்க வசதியாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பணிகளின் செயல்பாட்டை முறையாக கண்காணிக்கவும், மதிப்பிடவும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல், அடிப்படை வசதிகள் ஆகிய துறைகள் குறித்து வருடாந்திர அறிக்கைகள் வெளியிடப்படும்.
உதவித் தொகைகளை தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மத, சமூக ஒற்றுமையைக் கட்டிக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயம், உற்பத்தி மற்றும் சேவை துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவும், தமிழர்கள் உரிய மரியாதையோடு, பாதுகாப்போடு, சம உரிமையோடு வாழவும் இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்றார்.
மதிமுக எம்பியால் பரபரப்பு..
இலங்கை பிரச்சனை குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டபோது, ஈரோடு மதிமுக எம்பியான கணேசமூர்த்தி எழுந்து ஒரு அறிக்கையை வாசிக்க முயன்றார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனாலும் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றிக் கொண்டே இருந்தார். அவரது அடுத்தடுத்த அறிவிப்புகளை வரவேற்கும் வகையில் ஆளும் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து மேஜைகளைத் தட்டிக் கொண்டே இருந்ததால் கணேசமூர்த்தி பேசியது வெளியிலேயே கேட்கவில்லை.


Click it and Unblock the Notifications
