இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு - கருணாநிதியுடன் சிதம்பரம் ஆலோசனை
சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து சென்னையில் முதல்வர் கருணாநிதியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். மாலையில் நடந்த இந்த சந்திப்பின்போது, இருவரும் இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், மத்திய அமைச்சரவை அமைந்த பிறகு, உள்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இப்போது தான் முதன் முதலாக முதல்-அமைச்சரை சந்திக்கிறேன்.
ஆகவே நாட்டிலே உள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றி முதல்-அமைச்சரிடம் யோசனை கேட்டேன்.
அமைச்சரவை கூட்டத்திலும், குழு கூட்டத்திலும் இந்தப் பொருள்கள் விவாதத்திற்கு வரும்போது முதல்-அமைச்சர் கூறிய யோசனைகளை நான் அங்கே எடுத்து தெரிவிப்பேன். இலங்கைத் தமிழர்களை உடனடியாக பத்திரமான இடங்களிலே குடியமர்த்த வேண்டும். அவரவர்களுடைய இடங்களுக்கு அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். வீடிழந்த மக்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இலங்கை அரசு அதற்கான பணிகளிலே உடனடியாக ஈடுபட வேண்டும்.
இந்திய அரசைப் பொறுத்தவரையில் அதிக அளவிற்கு நிதி உதவி இதற்காக செய்வதாக அறிவித்திருக்கின்றது. அந்தத் தொகை முறையாக செலவழிக்கப்பட வேண்டும். மேலும் இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களுக்கு தரவேண்டிய அதிகாரப் பங்கீடுகள் குறித்தும் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சம் தேவையில்லை..
இந்தியாவுக்கு போக வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ப.சிதம்பரம்,
அமெரிக்கா, இந்தியா செல்லும் தனது நாட்டு சுற்றுலா பயணிகளை எச்சரித்ததாக முதலில் நினைத்தோம். நேற்று அவர்கள் அதை விளக்கியிருக்கிறார்கள். எச்சரிக்கை அல்ல, ஆலோசனை என்று சொல்லியிருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. உலகில் பல நாடுகளை விட இந்தியா பத்திரமான நாடு.
உளவுத்துறை மூலமாக தீவிரவாதிகள் பற்றி தகவல்கள் வருகின்றன. தீவிரவாதி மதனி பற்றி தகவல் வந்து டெல்லி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும்.
தீவிரவாதிகள் பற்றி வருகின்ற தகவல்களை அந்தந்த மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்கிறோம். அப்படி பகிர்ந்து கொள்ளும்போது அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். அது அவர்களுடைய கடமை. அதிலே நாம் தலையிடக் கூடாது.
பீதி கிளப்பக் கூடாது..
இதன் காரணமாக இன்றோ, நாளையோ தீவிரவாத தாக்குதல் நடக்கப் போகிறது என்ற அச்சம் தேவையில்லை. மக்கள் மத்தியில் இதுபற்றி யாரும் பீதியைக் கிளப்ப வேண்டிய அவசியமும் இல்லை. உளவுத் துறையினரும், காவல்துறையினரும் விழிப்பாக இருப்பதைத் தான் இந்த செய்திகள் காட்டுகிறதே தவிர தாக்குதல் நடக்கப் போகிறது என்ற அச்சம் மக்களுக்கு தேவையில்லை என்றார் சிதம்பரம்.
மேலும், சென்னையில் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. கட்டுமான வேலைகள் தொடங்கப்படவிருக்கின்றன. கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து தேசிய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவு சென்னையிலே அமையும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications