சென்னை சட்டக் கல்லூரி மாணவர் கலவரம் - விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வரலாறு காணாத மாணவர் மோதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சண்முகம் கமிட்டி தனது விசாரணை அறிக்கையை நேற்று முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது.
போலீஸாரின் கண் முன்பாகவே மாணவர்கள் சரமாரியாக கொலை வெறியுடன் தாக்கி வீழ்த்தப்பட்டனர். இந்த பெரும் கலவரத்தில், பாரதிகண்ணன், ஆறுமுகம் உள்பட ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சேகர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அரசு நியமித்தது.
இந்த கமிஷன் விசாரணை நடத்தி தற்போது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்தது. நேற்று முதல்வரை சந்தித்து நீதிபதி சண்முகம் தனது அறிக்கையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகம் பேசுகையில்,
சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கமிஷன் முன் நேரில் ஆஜராஜி சாட்சியம் அளித்தனர்.
பெட்டிக்கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் கூட ஆர்வத்தோடு வந்து மனு அளித்தனர். 2 மாதம் விசாரணை நடந்தது.
சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் பின்னணிக்கான காரணம், சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி முதல்வர் எடுத்த நடவடிக்கைகள், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள், அவற்றில் உள்ள குறைபாடுகள், எதிர்காலத்தில் இதுபோன்று வன்முறை சம்பவம் ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மோதல் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.
ஏற்கனவே மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 150 பக்கங்கள் கொண்டதாக விசாரணை அறிக்கை உள்ளது.
விசாரணை குறித்து தெரிவித்த விவரங்களை முதல்வர் உன்னிப்பாக கேட்டறிந்தார்.
சட்டக்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக பெங்களூரில் உள்ள தேசிய சட்டக்கல்லூரிக்கு சென்று ஆராய்ந்து வந்தோம். அதுபற்றிய ஆலோசனைகளையும் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தோம்.
சட்டக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் மாணவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.
சட்டக்கல்லூரியில் ஏற்கனவே இதுபோன்று பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. மோதல் சம்பவம் தொடர்பாக போடப்பட்ட 4-வது கமிஷன் இது.
எதிர்காலத்தில் சட்டக்கல்லூரிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையில் கூறியுள்ளோம். அந்த பரிந்துரைகளை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications