'சீனா-பாக்': இந்தியாவிடம் வாலாட்டும் இலங்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், சீனாவும், பாகிஸ்தானும் மாறி மாறி இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றன. இதனால் இலங்கை மீது இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்கப் பார்க்கிறது இலங்கை. அதற்கு சீனா, பாகிஸ்தான் உறுதுணையாக உள்ளன. அனைத்து வகையான அபாயகரமான ஆயுதங்களையும் சீனாவும், பாகிஸ்தானும் தாராளமாக வழங்கி வருகின்றன.

இந் நிலையில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது. காரணம், நமது எதிரிகள், இலங்கை வழியாக நம்மை வளைக்கப் பார்ப்பார்கள். எனவே இலங்கை அரசின் செயலுக்கு இந்தியா உதவி செய்யக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட அத்தனை அரசியல் தலைவர்கள், தமிழர் அமைப்புகள் கூறி வந்தனர்.

அத்வானி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் கூட இதையே வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவற்றையெல்லாம் அப்போது இந்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

ஆனால் இன்று போர் முடிந்து விட்ட நிலையில், சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்குள் ஆழ வேரூண்றி வருவதை அறிந்து இந்தியா கடும் அதிருப்தியுடன் உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் ஆசியா டைம்ஸ் ஆன்லைன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு ராணுவ ரீதியாக பெருமளவில் உதவி செய்ததை இந்தியா விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

சீனா, பாகிஸ்தானிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களை இலங்கை கொள்முதல் செய்து குவித்து வைத்திருப்பதாக இந்தியா சந்தேகப்படுகிறதாம். போருக்கு முன்பாகவே இதை இலங்கை செய்திருக்கலாம் என்றும் இந்தியா சந்தேகப்படுகிறதாம்.

அதி நவீன ஆயுதங்கள் இலங்கைக்குக் கிடைத்ததால்தான் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கையால் வெற்றி பெற முடிந்தது என்றும் இந்தியா நம்புகிறது.

இலங்கைப் படைகளின் வெற்றிக்கு அந்த நாட்டுப் படையினரின் திறமை முக்கிய காரணமல்ல, மாறாக சீனா, பாகிஸ்தான் கொடுத்த அதி நவீன ஆயுதங்கள்தான் முக்கியம் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஒரு அதிகாரி கூறுகையில், சீனாவின் ஆதிக்கம் தெற்காசியப் பகுதியில் வலுத்து வருகிறது. நேபாளத்தில் அது தலையிட்டு வருகிறது. அதேபோல பாகிஸ்தான், வங்கதேசத்தில் ஏற்கனவே காலூன்றி வருகிறது. இப்போது இரு நாடுகளும் சேர்ந்து இலங்கையில் காலூன்ற முயற்சிக்கின்றன.

அப்படி நடந்து விட்டால் அது இந்தியாவுக்கு மிகப் பெரும் சிக்கலாகி விடும். இதைத் தடுக்க தூதரக ரீதியில் இந்தியா சமயோஜித நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய எதிரியாக சீனா விளங்கினாலும் கூட, பாகிஸ்தான் தான் உடனடிக் கவலையாக உள்ளது. காஷ்மீர் வழியாகவும், வங்கதேசம் மூலமாகவும் தீவிரவாதத்தை வளர்த்து வந்த பாகிஸ்தான் இனி இலங்கை வழியாகவும் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை ஊடுறுவச் செய்யலாம் என இந்தியா கவலைப்படுகிறது.

பாகிஸ்தான், தனது அதி நவீன அல் காலித் டாங்குகள், விமானிகளுக்கான பயிற்சிகள், அதி நவீன ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை இலங்கைக்கு தாராளமாக கொடுத்துள்ளதாம். இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய கவலையாக உள்ளதாம்.

அதேபோல இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான ராணுவ உறவு 2007ம் ஆண்டே தொடங்கி விட்டதாம். 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரு நாடுகளும் படு ரகசியமாக 38 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனராம்.

இலங்கை ராணுவத்திற்கும், கடற்படைக்கும் தேவையான ஆயுதங்களை வாங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாம். இதை ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இதுதவிர கடந்த ஆண்டு இலங்கைக்கு 6 அதி நவீன எப்-7 விமானங்களையும் சீனா கொடுத்துள்ளதாம். விடுதலைப் புலிகள் வைத்திருந்த குட்டி விமானங்களை தாக்கி அழிப்பதற்காக இந்த விமானங்களைக் கொடுத்ததாம் சீனா.

புலிகளுக்கு எதிரான போரில் சீனாவும், பாகிஸ்தானும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களையும், பிற உதவிகளையும் தாராளமாக வழங்கியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க சீனா விரும்புகிறது. பாகிஸ்தானுடன் இணைந்து, இலங்கையின் உதவியுடன் இதை சாதிக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா கருதுகிறுது.

இலங்கையின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா, ஆழ் கடல் துறைமுகத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் பணி தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், க்வாதர் துறைமுகத்திலும் சீனாவின் தலையீடு உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் கவலை தரும் விஷயம்.

2007ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், மத்திய அரசிடம் இப்படிச் சொன்னாராம் - இந்தப் பிராந்தியத்தில்தான் நாம்தான் மிகப் பெரிய சக்தி. எனவே இலங்கை அரசு, தனது தேவைக்காக பாகிஸ்தானுக்கோ அல்லது சீனாவுக்கு போவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அவர்களுக்கு என்ன தேவையென்றாலும் நம்மிடமே வரட்டும். நாம் அவர்களின் தேவையை நிறைவேற்றுவோம் என்றாராம்.

இப்படி, சீனா, பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்கு இலங்கை போய் விடாமல் தடுப்பதற்காக, இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருந்ததாம். இருப்பினும் தமிழகத்திலிருந்து வந்த கடும் நெருக்கடிகள் காரணமாக ஆயுத சப்ளையை மட்டும் செய்வதில்லை என்ற முடிவை இந்தியா எடுத்ததாம்.

இதுகுறித்து இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில் கூறுகையில், இந்தியா ஆயுதங்களைத் தருவதில்லை என்ற கொள்கை முடிவில் இருந்த காரணத்தால்தான், நாங்கள் பாகிஸ்தான், சீனாவை நாடினோம் என்று கூறியுள்ளார்.

அதாவது, இலங்கைக்கு ஆயுதங்கள் அனைத்தையும் தருவோம் என்று நாராயணன் வேண்டி விரும்பி கூறியிருந்தபோதிலும், தமிழகத்தின் நெருக்கடி காரணமாக ரேடார்கள் உள்ளிட்ட சிலவற்றோடு இந்தியா நின்று கொண்டது.

இன்று போர் முடிந்து விட்டது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போருக்கான களமாக இன்று இலங்கையை மாற்றி விட்டன சீனாவும், பாகிஸ்தானும். இது இந்தியாவுக்கு பெரும் சவாலான விஷயம். இதை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இந்தியா உள்ளது.

ராணுவ பலத்தை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்று இலங்கைக்கு எடுத்துரைத்து, தமிழர்களுக்கும் சம அந்தஸ்து வழங்க இலங்கையை இந்தியா நிர்ப்பந்தப்படுத்த வேண்டும்.
தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்.

இதுதவிர தமிழ் மக்களின் மறுவாழ்வு, தமிழர் பகுதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளிலும் இந்தியா பெரும் பங்காற்ற வேண்டும். இதன் மூலம் சீனா, பாகிஸ்தானின் ஆதிக்கம் மேலும் தொடராமல் சற்று தடுக்க முடியும்.

இதையெல்லாம் இந்தியா அரசு எந்த வகையில் செய்யப் போகிறது, எப்படி செய்யப் போகிறது, இந்தியாவின் எண்ணத்துக்கேற்ப இலங்கை செயல்படுமா, நடந்து கொள்ளுமா என்பதையெல்லாம் காலம்தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+