பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-வைகோ
தென்காசி: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்பதில் சந்தேகமும் இல்லை. அவர் உரிய நேரம் வரும்போது வெளியே வருவார் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
இதுவரை நடந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நெல்லை முதலிடம் வகிக்கிறது. புறநகர் மாவட்ட கூட்டத்தில் ரூ. 80 ஆயிரமும், மாநகர் மாவட்டத்தில் ரூ. 72 ஆயிரமும் உறுப்பினர் நிதியாக கொடுத்துள்ளனர். ஆளும் கட்சியான திமுக ஒரு முறை தோல்வியை தழுவினால் மீண்டும் எழுந்திருக்கவே முடியாது.
அதிமுக தலைமையிலான நமது கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக கூட்டணியினர் 28 இடங்களை கைப்பற்றியுள்ளனர். ஒரு தொகுதிக்கு ரூ. 30 கோடி வரை செலவு செய்துள்ளனர்.
எம்எல்ஏ, எம்பி பதவிக்காக கட்சி துவக்கவில்லை. மதிமுகவை விட்டு யார் விலகினாலும் மதிமுக நிமிர்ந்து நிற்கும். இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி, பண உதவி ராடர் உதவி, கேமரா போன்றவற்றை வழங்கியுள்ளது. விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கொண்டு வந்த கப்பல்களை தடுத்து விட்டனர்.
இலங்கையை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை இந்தியா தடுத்துவிட்டது. புலிகளுக்கு நிகராக போர் நடத்தியவர்கள் யாரும் இல்லை. பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இலங்கை அரசு பரப்பும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும். இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications