குற்றங்களின் மையமாக மாறி வரும் செளகார்பேட்டை
சென்னை: சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான செளகார்பேட்டை, குற்றச் செயல்களின் மையமாக மாறி வருகிறது. இங்குள்ள மார்வாடிகளுக்காக எதையும் செய்யும் கூலிப்படையினர் இங்கு செயல்பட்டு வருவதால் சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னை நகரின் மையப் பகுதியாக திகழ்கிறது செளகார்பேட்டை. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள்தான். குறிப்பாக மார்வாடி சமூகத்தினர் நிறைய குவிந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சாதாரண சிறு கடை முதல் பெரிய நகைக் கடை, ஜவுளிக் கடை, அடகுக் கடை வரை அத்தனையும் மார்வாடிகளின் கையில்தான் உள்ளது.
இந்தப் பகுதி இப்போது திகில் நிறைந்த குற்றப் பகுதியாக மாறி வருகிறது. இங்கு ஏராளமான கூலிப்படையினர் நடமாடுவதாக கூறப்படுகிறது.
அடகு பிடிக்கும் நகைக் கடை சேட்கள், ஆட்டோக்களை வட்டிக்கு வழங்கும் சேட்கள் உள்ளிட்டோருக்கு பணத்தை வசூல் செய்து தரும் பொறுப்பை இந்த கூலிப்படையினர்தான் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
பெரும் பணம் புழங்கும் இடமாக உள்ளதால் குற்றச் செயல்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.
இந்தப் பகுதியில் சமீப காலமாக ஏகப்பட்ட குற்றச் செயல்கள் குறிப்பாக பதை பதைக்க வைக்கும் கொலைச் செயல்கள் நடந்துள்ளது இதை நிரூபிப்பதாக உள்ளது.
மே 30ம் தேதி இப்பகுதியில் உள்ள சந்திர பிரபு மகராஜ் ஜூனா ஜெயின் கோவிலில் பூசாரி படுகொலை செய்யப்பட்டு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த வாரம் நகைக் கடை புரோக்கர் சுரேஷ்குமார் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்களை தெருத் தெருவாக போய் போலீஸார் சேகரிக்க வேண்டியது ஏர்பட்டது.
ஜெயின் கோவில் கொலை வழக்கில் போலீஸார் வெற்றி பெற்று விட்டனர். ஆனால் சுரேஷ்குமார் கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது.
செளகார்ப்பேட்டையில் பெரும் பணப் புழக்கமும், பெரும் பெரும் தொழில்களும் நடைபெறுவதோடு கருப்புப் பண நடமாட்டமும் இங்கு அதிகம். கிரிக்கெட் சூதாட்டக் கும்பலின் சொர்க்கபுரியாகவும் இது திகழ்கிறது.
இந்தப் பகுதி பூக்கடை காவல் நிலையத்தின் கீழ் வருகிறது. பூக்கடை காவல் நிலையத்திற்கு இப்பகுதியிலிருந்து பெருமளவில் மாமூல் போவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை போலீஸார் கண்டும் காணாமல் விட்டு விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஒரு காவல்துறை அதிகாரியே இப்படிச் சொல்கிறார்...
இப்பகுதியில் கரை படிந்த போலீஸாரால்தான் குற்றச் செயல்களை தடுக்க முடியாமல் போகிறது. எந்த வகையான குற்றச் செயல்களைச் செய்தாலும் ஊழல் படிந்த போலீஸாரைக் கவனித்து விட்டால் அவர்கள் அதை மூடி மறைத்து விடுகிறார்கள் என்ற தைரியத்தால் குற்றவாளிகள் இங்கு கொட்டமடித்து வருகின்றனர்.
இங்கு பெருமளவில் கருப்புப் பணம் நடமாடுகிறது. இங்கு பெரும் பணக்காரர்கள் (பெரும்பாலும் மார்வாடிகள்தான்) தங்களுக்கென தனித் தனியாக கூலிப்படையினரை வைத்துள்ளனர். பணம் வசூல் செய்வது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, மிரட்டுவது, பொருட்களை பறிமுதல் செய்வது என அத்தனை சட்டவிரோத செயல்களிலும் இந்தக் கும்பலை அவர்கள் ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் நடைபெறும் கடத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அனைத்துமே காவல் நிலையத்திற்கு வெளியேயே வைத்து பணத்தைக் கொடுத்து சரிக்கட்டப்பட்டு விடுகின்றன என்கிறார்.
இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான நகைக் கடைகள், அடகுக் கடைகளில் நகை மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பாக எந்தவித ஆவணமும் பராமரிக்கப்படுவதில்லை. நம்பிக்கையின்பேரில்தான் வியாபாரம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கருப்புப் பண பரிமாற்றம், நகை விற்பனை உள்ளிட்டவை யாருக்கும் தெரியாமல் நடைபெறுகின்றன. இங்கு கடும் போட்டி நிலவுவதால் அதுதொடர்பான முன்விரோதங்களும் இப்பகுதியில் அதிகம்.
கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் ஒரு கமிஷன் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்தார். பெருமளவில் பணப் புழக்கத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே போட்டிக் கும்பலால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் பை நிறைய பணம், நகைகளுடன் பலரும் செல்வதை சர்வ சாதாரணமாக காண முடியும்.
திருட்டு நகைகளுக்கான சந்தையாகவும் இந்தப் பகுதி திகழ்கிறது. பல்வேறு இடங்களில் திருடப்பட்டு நகைகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை சுரேஷ்குமார் போன்ற புரோக்கர்கள் வாங்கி நல்ல விலைக்கு விற்றுத் தருகின்றனர். போலீஸாருக்கும் இது நன்றாகவே தெரியும். ஆனாலும் ஏனோ மெளனமாகவே உள்ளனர்.
இங்கெல்லாம் பணம் தான் பேசும், யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு விலைக்கு படிந்து போய் விடுவார்கள். எனவே இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இப்பகுதியில் தடுப்பது கனவாகவே உள்ளது என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் ராம் என்பவர்.
இந்த நிலை இப்படியே நீடித்தால் தமிழகத்திலேயே மிக மோசமான குற்றப் பகுதியாக செளகார்பேட்டை மாறி விடும் அபாயம் இருப்பதாக இப்பகுதி வியாபாரி ஒருவர் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications