தி.நகர் நடைபாதைக் கடைகள் அகற்றம்-பதட்டம்
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தியாகராயர் நகரில் உள்ள உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் நடைபாதை கடைகள் போடப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்த புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதுதொடர்பாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்குகளும் தொடர்ந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மாநகராட்சி மண்டல அதிகாரி ஞானமணி தலைமையில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் உஸ்மான் சாலையில் ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த பிளாட்பார கடைகளை மாநகராட்சி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தி.நகர் பஸ் நிலையம் முதல் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போடப் பட்டிருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. லாரிகளில் அந்த பொருட்களை அள்ளி போட்டு எடுத்து செல்லப்பட்டது.
பிளாட்பார கடைகள் அகற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
வீடுகளை அகற்ற எதிர்ப்பு..
இதேபோல, மயிலாப்பூரில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கும் 625 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளை அகற்றக் கூடாது என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வசித்து வரும் இந்த குடும்பத்தினர் இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வசித்து வருகிறோம்.
மாநகராட்சி வீட்டு வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வரி உள்ளிட்டவற்றை முறையாக கட்டி வருகிறோம்.
அரசும் எங்களுக்கு மி்ன்சார வசதி செய்தும் தந்துள்ளது. பட்டா வழங்கக் கோரி நாங்கள் விண்ணப்பித்துள்ளோம்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் எங்களது வீடுகளை இடிக்க முடிவு செய்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
எங்களை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications