விரலை வெட்டி பெண்ணிடம் நகை பறிப்பு-சென்னையில் கொடூரம்
சென்னை: சென்னை அருகே திருடிய சங்கிலியை விடாமல் பிடித்துக் கொண்ட பெண்ணின் விரலை வெட்டி தங்கச் சங்கிலியுடன் திருடர்கள் மாயமானார்கள்.
தாம்பரம் அடுத்து சேலையூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் குப்பம்மாள். 65 வயதான இவர் வேளச்சேரியில் இருந்து தனது வீட்டுக்கு போவதற்கு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பக்கமாக மோட்டார் பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் அவரது கழுத்தில் இருந்த சுமார் ஐந்தரை பவுன் தங்க நகையை பறிக்கும் நோக்கத்தில் வந்தனர். பைக் அந்த பெண்மணி அருகில் வர பின்னாலிருந்தவன் அவரது சங்கிலியை அறுக்க முயன்றான்.
இதையடுத்து உடனடியாக சுதாரித்து கொண்ட குப்பம்மாள், சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டார். கொள்ளையர்கள் கடினமாக முயன்ற போதும் செயின் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் குப்பம்மாளின் கையில் கத்தியால் வெட்டினான். இதில் குப்பம்மாளின் கட்டை விரல் துண்டாகி ரத்தம் பெருக்கெடுத்தது. வலியில் துடித்த குப்பம்மாள் சங்கிலியில் இருந்த பிடியை நழுவ விட்டார்.
அந்த கொள்ளையர்கள் நகையுடன் மாயமாகி விட்டனர். இதையடுத்து குப்பம்மாள் வெட்டப்பட்ட விரலுடன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
