செயல்பட துவங்கியது சென்னை என்.எஸ்.ஜி பிரிவு

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் என்.எஸ்.ஜி. பிரிவுகளை தொடங்க மத்திய உள்துறை திட்டமிட்டது.
அதன்படி முதலாவது என்.எஸ்.ஜி. பிரிவு மும்பையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று நடந்த விழாவில் சென்னையில் என்எஸ்ஜி பிரிவை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார்.
அப்போது சிதம்பரம் கூறுகையில்,
என்எஸ்ஜி படையினர் அவசர காலங்களில் அதிவேகமாகவும், துடிப்புடனும் செயல்படுவார்கள். என்எஸ்ஜி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் இனி திடீர் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயாராக இருக்கும்.
நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் என்எஸ்ஜி படை பிரிவை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். என்எஸ்ஜி வீரர்கள் மாநில காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்.
மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஐக்கிய முற்போக்கு அரசு ஜூன் 30 அல்லது ஜூலை 1ம் தேதி என்எஸ்ஜி படைகள் துவக்கப்படும் என கூறியிருந்தது. தற்போது தாங்கள் கொடுத்த வாக்கை சரியாக கடைபிடித்துள்ளது.
சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மையம் அசோக் நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் தற்காலிகமாக செயல்படும். வருகிற நவம்பர் மாதத்துக்குள் காஞ்சீபுரம் மாவட்டம் நெடுங்குன்றத்தில் நிரந்தர மையம் செயல்படத்தொடங்கும். இதற்காக 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 12 நிமிடங்களில் நெடுங்குன்றம் சென்று விடலாம்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள மையங்களிலும் தலா 241 கமாண்டோ வீரர்கள் இடம் பெற்று இருப்பார்கள். ஹரியாணா மாநிலம் குர்கானில் தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
பெரு நகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஹெலிகாப்டர் வாங்கும் திட்டம் உள்ளது. அதன்படி மாநில அரசிடம் ஹெலிகாப்டர் இருந்தால் தேசிய பாதுகாப்பு படை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விமான நிலையங்களில் இருக்கும் எந்த ஒரு விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ தங்களது தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெண் கமாண்டோக்கள் குறைந்த அளவில் தான் உள்ளனர். இது போன்ற பணிகளை அவர்கள் பயன்படுத்துவது குறித்து கமாண்டோ படை தலைவர் முடிவு செய்வார். தேசிய பாதுகாப்பு படைக்கு ராணுவத்தில் இருந்து 53 சதவீதத்தினரும், துணை ராணுவ படையில் இருந்து 47 சதவீதத்தினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.
இதுகுறித்து டிஜிபி கே.பி. ஜெயின் கூறுகையில்,தமிழக காவல்துறையுடன் இணைந்து என்எஸ்ஜி பிரிவு இயங்கும். மேலும், தமிழக காவல்துறையின் கமாண்டோ படை வீரர்கள், என்.எஸ்.ஜி வீர்ரகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்வர்.
டெல்லிக்கு அடுத்தபடியாக அமைக்கப்படும் 2வது என்.எஸ்.ஜி. பிரிவு சென்னைதான். மேலும், மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் அமையவுள்ள என்.எஸ்.ஜி. படைக்கு அதிக இடத்தை வழங்கியுள்ளது தமிழகம் மட்டுமே என்றார்.
அதேசமயம் மும்பையில் 23 ஏக்கர் நிலமும், ஹைதராபாத்தில் 22 ஏக்கரும், கொல்கத்தாவில் 20 ஏக்கர் நிலமும் மட்டுமே தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான வீடியோ:












Click it and Unblock the Notifications