கொலை-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு ஆயுள்
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் மற்றும் பெருமாள் பாண்டியன் ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் இருவரின் குடும்பத்தினரிடையே பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் பெருமாள் பாண்டியன் மகனான சங்கிலி முருகனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோபால கிருஷ்ணன் மகன் பாலமுருகன் கழுகுமலையில் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் பாலமுருகனை விடுதலை செய்தது.
இதை தொடர்ந்து பெருமாள் பாண்டியன் மகன்களான நடராஜன், செல்வம், அங்கையர்கண்ணி ஆகியோர் தங்கள் சகோதரர் சங்கிலிமுருகனை கொலை செய்த பாலமுருகனை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் கரிசல்குளத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டு வரும் வழியில் பெருமாள் பாண்டியன் மகன்களான நடராஜன், செல்வம், அங்கையர்கண்ணி, மற்றும் உறவினர்கள் மருதுபாண்டி, செல்லசாமி, மருதுபாண்டியின் தாய் ஜெயலெட்சுமி ஆகியோர் பாலமுருகனை வழிமறித்து சராமரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த வழக்கு விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன், செல்வம், அங்கையர்கண்ணி, செல்லசாமி, பாண்டி,ஜெயலெட்சுமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
பழிக்கு பழியாக நடந்த கொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உள்பட ஆறு பேருக்கு விரைவு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதிமன்ற வாளகம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications