கருணாநிதியுடன் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் சந்திப்பு
சென்னை: இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக பேசினார்.
இலங்கை தொழிலாளர் கங்கிரஸ்கட்சியின் தலைவராகவும், அந்நாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பவர் தொண்டைமான்.
சென்னை வந்த தொண்டைமான் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியும் உடன் இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த தொண்டைமான் கனிமொழியை சந்தித்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து விவாதித்திருந்தார். இந்த நிலையில் முதல்வரை நேற்று சந்தித்தார்.
நேற்றைய சந்திப்பின்போது இந்தியாவால் பிடித்துச் செல்லப்பட்ட 107 இலங்கை மீனவர்களையும், அவர்களின் 21 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக கருணாநிதியுடன் தொண்டைமான் பேசினார்.
மேலும் இலங்கை நிலவரம் குறித்தும், தமிழர் பிரச்சனை குறித்தும் தொண்டைமான் முதல்வருடன் பேசினார். இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சினைகள், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொண்டைமானிடம், வன்னிப் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications