இலங்கை அரசின் சமாதான செயலகம் மூடல்!
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் அமைதிபர் பேச்சு நடத்துவதற்காக துவக்கப்பட்ட சமாதான செயலகத்தை இலங்கை அரசு மூடவுள்ளது.
அடுத்த மாதம் இந்த செயலகம் மூடப்படும் என்று தெரிகிறது. இதற்கான உத்தரவை இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
சமாதான செயலகத்தின் பொறுப்பாளராக உள்ள ராஜீவ விஜயசிங்க கூறுகையில், அதிபரின் உத்தரவில் சமாதான அலுவலகம் மூடப்படுவதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்க விரும்பவில்லை என்றார்.
அனைத்துக் கட்சி குழு அமைக்கும் ராஜபக்சே:
இதற்கிடையே வளர்ச்சி மற்றும் மறு சீரமைப்பு மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்துக் கட்சி கமிட்டி ஒன்றை நியமிக்க இலங்கை ராஜபக்சே விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை செயலகம் தெரிவிக்கையில், பிரபாகரனுக்குப் பிந்தைய சூழ்நிலைகளை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மறு சீரமைப்பு, மறுவாழ்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளை இந்த அனைத்துக் கட்சிக் கமிட்டி வகுக்கும்.
மாதந்தோறும் ஒருமுறை அதிபர் தலைமையில் கூடி விவாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்து அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதேபோல நீண்ட காலமாக நீடித்து வந்த இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் அரசு உறுதியுடன் உள்ளது. 13வது அரசியல் சட்ட திருத்தமும் அமல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications