மதுரை அருகே பட்டாசு ஆலையில் பயங்கரம் - 17 பேர் பலி
மதுரை: மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உடல் கருகி 17 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ளது வடக்கம்பட்டி. இங்கு துரைப்பாண்டியன் என்பவர் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அரசு அனுமதி பெற்று முறைப்படி இந்த பட்டாசு தொழிற்சாலை நடந்து வருகிறது.
இங்கு 60-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர். ஆலைக்குள் பட்டாசு தயாரிக்கும் பணி பல்வேறு அறைகளில் நடந்து வந்தது. நேற்று மாலையிலும் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு அறையில் பட்டாசுகள் திடீரென வெடித்து தீ பரவியது. அங்கு வெடித்த பட்டாசுகள் பக்கத்து அறைகளுக்குள்ளும் போய் விழுந்ததால் அங்கிருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின.
ராக்கெட் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கும் தீ வேகமாக பரவியது. அவை தாறுமாறாக பல்வேறு பகுதிகளுக்கும் பாய்ந்து சென்ற வண்ணம் இருந்தன.
இந்த பயங்கர விபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. உள்ளே வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
பட்டாசுத் தொழிற்சாலையிலிருந்து வெளியே பாய்ந்து வந்த ராக்கெட்கள் அருகில் இருந்த வீடுகளுக்குள்ளும் விழுந்தது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடினர்.
தீயணைப்பபுப் படையினர் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிக் கிடந்தனர். அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கருகிக் காணப்பட்டன.
20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் துரைப்பாண்டியன் போலீஸில் சரணடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications