அல்லாவின் பெயரால் கருணை காட்டுங்கள்: சரப்ஜித்
இஸ்லாமாபாத்: அல்லாவின் பெயரால் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நான் எனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வகை செய்யும் விதத்தி்ல் எனக்குக் கருணை காட்டி மன்னித்து விடுவியுங்கள் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சரப்ஜித் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் பரிதவித்து வரும் சரப்ஜித் சிங் சார்பில் அதிபர் சர்தாரியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. அத்துடன் சரப்ஜித் சிங் எழுதியுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தனக்கு கருணை காட்ட வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார் சரப்ஜித் சிங்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது...
மரண தண்டனைக் கைதியான சரப்ஜித் சிங் எனப்படும் நான், கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் தவித்து வருகிறேன்.
அல்லாவின் பெயரால் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள். மிச்சமுள்ள எனது வாழ்நாளை, எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கழிக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதியுங்கள் என்று கோரியுள்ளார் சிங்.
உருது மொழியில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கின் புதிய வக்கீலான ஓவைஸ் ஷேக் கூறுகையில், நாளை அதிபர் சர்தாரியிடம் சரப்ஜித் சிங்கின் கருணை மனுவும், அவர் எழுதியுள்ள கடிதமும் வழங்கப்படவுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications
