காவல் நிலையம் முன் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்
கோவை: கோயம்புத்தூர் மகளிர் காவல் நிலைய வாசலில் வைத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற பனியன் தொழிலாளி ஒருவர் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் முத்து (27). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். முத்துவுக்கும் அவரது அக்காள் மகள் தனலட்சுமி (26) என்பவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு சாருலட்சுமி (5), சுஜீவன் (3) என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த முத்து தனது மனைவியையும், குழந்தை சாருலட்சுமியையும் அவரது தாய் வீட்டில் விட்டு வந்துவிட்டார்.
தனது மகன் சுஜீவனை மட்டும் தன்னுடன் வைத்து கொண்டார்.
இந்நிலையில் தனியாக இருக்கும் தனது மனைவிக்கும், அப்பகுதியில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடிக்கடி தனது மனைவியை சென்று சந்தித்து தகராறு செய்துள்ளார்.
முத்துவின் தொல்லை தாங்க முடியாமல் அவரது மனைவிய தனலட்சுமி தொண்டாமுத்தூர் பகுதிக்கு வீடு மாறி சென்றுவிட்டார்.
நேற்று காலை சுண்டப்பாளையம் சென்ற முத்து தனது மனைவியிடம் தான் திருந்திவிட்டதாக கூறி, தன்னோடு குடும்ப நடந்த வருமாறு வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் தனலட்சுமியும் சென்றார்.
அவர்கள் நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதை போல இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த முத்து அருகிலுள்ள கடைக்கு சென்று சிறிய கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். தன்னை கொல்வதற்காக தான் முத்து கத்தி வாங்குகிறார் என்பதை அறிந்து கொண்ட தனலட்சுமி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அருகிலிருந்த மகளிர் காவல் நிலையத்தை நோக்கிய ஓடிய அவரை துரத்தி சென்ற முத்து, காவல் நிலையத்துக்கு முன்னால் தடுத்து நிறுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் போலீசில் சரணைடந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications