'மலத்தை கையால் அள்ளுவது நாட்டுக்கே அவமானம்'
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளும் அவல நிலை நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மக்களவையில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
ரயில்வே பட்ஜெட்டில் 'கிளாஸ் 4' தொழிலாளர்கள் நலன் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இந்த 21ம் நூற்றாண்டிலும் ரயில்வே துறையின் துப்புரவுத் தொழிலாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளும் நிலை உள்ளது. இது நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம்.
எனவே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசு தானியங்கி கருவிகளை வாங்க வேண்டும். அவ்வாறு தானியங்கிக் கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட பின் அந்தத் தொழிலாளிகளுக்கு வேறு வகையான பணிகளை கொடுக்கலாம்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை. ஆனால் ரயில்வே கிளாஸ் 4 தொழிலாளர்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை. இது மிகப்பெரிய அநீதியாகும். எனவே அரசு அவர்களது வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
அகல ரயில் பாதை மாற்றும் திட்டத்திலுள்ள சில குறைகளை இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். 2009-10ம் ஆண்டுக்கென ஒரு இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1300 கிமீ அளவிலான வழித்தடங்கள் பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான வழித்தடத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த வழித்தடம் கிட்டத்தட்ட 4 மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் வழித்தடமாகும். இன்தப் பணியை விரைவுபடுத்தி ரயில் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
அதைப் போலவே மகளிர் சுய உதவி குழுக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ரயில்வே நிலையங்களில் கடைகள் நடத்த அனுமதியளிப்பதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
ரயில்வே மாளிகைகளில் உதவியாளர், துப்புரவுத் தொழிலாளர் நியமனத்தில் உள்ள இட ஒதுக்கீட்டில் சுழற்சி முறை கையாளப்பட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
விழுப்புரம்- திண்டுக்கலுக்கு இடையேயான பாதையில் இரண்டு அகல ரயில் பாதையும், கும்பகோணம்- அரியலூருக்கு இடையே புதிய அகல ரயில் பாதையும், அரியலூர்- சேலம் இடையே அகல ரயில் பாதையும் அமைக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 8 புதிய ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு 50 சதவீத பங்காக செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு போதுமான வருவாய் இல்லாததால் இந்த நிபந்தனை ஏற்புடையதல்ல. எனவே எல்லா திட்டங்களுக்கான முழு செலவையும் ரயில்வே துறையே ஏற்க வேண்டும் என்றார்.
மிக அட்டகசமான கருத்துக்களை எடுத்து வைத்த திருமாவளவனின் பேச்சுக்கு பிற எம்பிக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.












Click it and Unblock the Notifications