சட்டசபையி்ல் தெலுங்கில் பாடிய எம்எல்ஏ!
சென்னை: முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரைப் பாராட்டி தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் கவிதை பாடி சபையை கலகலக்க வைத்தார் ஓசூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோபிநாத்.
கோபிநாத் சட்டசபையில் பெரும்பாலும் தெலுங்கில்தான் பேசுவார். காரணம் அது அவரது தாய்மொழி. அவர் பேசுவது பலருக்கும் புரியாது என்பதால் அந்த சமயத்தில் சட்டசபையில் சிரிப்பலைக்குப் பஞ்சம் இருக்காது.
நேற்றும் கோபிநாத் வழக்கம் போல பேச எழுந்தார். கூடவே சிரிப்பொலியும்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன், காமெடியாக, நீங்க தெலுங்கில் பேசுவதானால் அனுமதி வாங்கியாகணும் என்றார். அதற்கு கோபிநாத், இல்லை இல்லை நான் ஆங்கிலத்தில்தான் பேசப் போறேன் என்றார்.
சரி என்று விட்டு விட்டார் சபாநாயகர். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்த கோபிநாத், டகாரென்று தெலுங்குக்து தாவி கவிதை பாட ஆரம்பித்தார்.
என்ன கவிதை, யாரைப் பாராட்டுகிறார் என்று புரியாமல் அனைவரும் விழித்தனர். ஆனால் இடை இடையே கருணாநிதி, ஸ்டாலின் என்ற பெயர்கள் வந்ததால், ஆஹா, முதல்வரையும், துணை முதல்வரையும்தான் புகழ்கிறாரப்பா என்று புளகாங்கிதமடைந்த திமுகவினர் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
பின்னர் ஸ்டாலினை மட்டும் தனியாகப் புகழ்ந்து ஆங்கிலத்திலும் ஒரு கவிதையைப் பாடினார் கோபிநாத்.
கோபிநாத் பேசி முடிக்கும் வரை சபையில் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது.












Click it and Unblock the Notifications