தமிழக காவல்துறை ஜாதி சங்கமாகிவிட்டது-காங்.
சென்னை: தமிழக காவல்துறை ஜாதி சங்கமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன் சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
வரதன்: தமிழக காவல் துறையில் ஜாதி உணர்வு அதிகமாகிவிட்டது. காவல் துறையா? ஜாதி சங்கமா? என்று கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போலீஸாருக்கு முழு சுதந்திரம் இருந்தது.
ஆனால் இப்போது போலீஸாருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளுமே காரணம்.
தியாகராய நகர், பாண்டி பஜார், பூக்கடை, கோடம்பாக்கம் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்ற போலீஸாரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் 'கலெக்சன்' தான்.
முன்பெல்லாம் குடும்ப பின்னணியை ஆராய்ந்த பிறகுதான் போலீஸ் வேலையில் சேர்ப்பார்கள். இப்போது அந்த வழக்கம் எல்லாம் போய் குற்றவாளிகளே போலீஸ் அதிகாரிகளாக வந்துவிடுகிறார்கள். குற்றங்கள் பெருகி வருவதற்கு இது முக்கியமான காரணம்.
1967க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் தான் இங்கு ஆட்சி செய்கின்றன. இரு திராவிட கட்சிகளும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் போளூர் வரதன்.
துணை முதல்வர் ஸ்டாலின்: உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை திங்கள்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையில் தெளிவாக சொல்வோம் என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ மாலைராஜா, ஜாதி சங்கங்களால்தான் மோதல்களே நடக்கின்றன. எனவே அனைத்து ஜாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். அதற்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட்): போராட்டங்கள் நடக்கும்போது தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் போலீஸார் செயல்படுகின்றனர்.
செல்வந்தர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாகவும், சாமானிய மக்களின் புகார்களை போலீஸார் பதிவு செய்வதில்லை என்றும் தேசிய காவல்துறை ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளைத்தான் பார்க்க வேண்டும். குற்றவாளிகளின் சட்டையைப் பார்க்கக் கூடாது என்று அண்ணா குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): லட்சுமி நாராயணன், வைகுந்த் போன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் காவல் துறையில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதாக எழுதியுள்ளனர்.
காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இடதுசாரி தீவிரவாதம் என்று முதல்முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரின் கார்கள் எரிக்கப்பட்ட வழக்கு, இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் கார்களை எரித்து விட்டதாக போலீஸார் கூறுகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் காரை எரித்துவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பிவிடுவார்கள் என்பதை பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.
ஞானசேகரன் (காங்கிரஸ்): சென்னையில் மாநகர போலீஸ் மாநகர், புறநகர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதன்மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் என காரணம் கூறப்பட்டது. ஆனால், காவல் ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் சென்னையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறையவில்லை.
ஒரு பதவிக்கு இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் அதிகாரி அந்த இடத்தை, அங்கு பணி புரியும் சக போலீஸ் அதிகாரிகள், அந்தப் பகுதியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை புரிந்துக் கொள்வதற்குள் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்.
நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் இருந்த கூலிப்படைகளின் செயல்பாடுகள் தற்போது வேலூர் வரை வந்துவிட்டன. இதனால், கொலை, கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை ரூ. 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால், குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. குடிப்பழக்கம் அதிகரித்ததே குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.












Click it and Unblock the Notifications