அறுபடை வீடுகளை இணைத்து சிறப்பு ரயில்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் வருகிற 27ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும். அறுபடை வீடுகள் உள்ள ஊர்களுக்கு அருகாமையில் உள்ள ஊர்களை இந்த சிறப்பு ரயில் தொட்டுச் செல்லும்.

மேலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருச்செந்தூர் இணைப்பு ரயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) எம்.எஸ்.ஜெயந்த் அறிவித்துள்ளார். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

திருச்செந்தூர்-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. அப்போதிருந்தே இந்த ரெயிலை வாரம் 7 நாட்களும் இயக்க வேண்டும் என்று திருச்செந்தூர் பகுதி மக்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு 27-ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ஜெயந்த் அறிவித்துள்ளார்.

சென்னை சென்டிரல்-திருச்செந்தூர் சிறப்பு ரயில் திங்கள் மற்றும் சனிக்கிழமைதோறும் சென்னையில் பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் 27-ந் தேதி முதல் வரும் அக்டோபர் மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படும்.

திருச்செந்தூர்-சென்னை சென்டிரல் சிறப்பு ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைதோறும் திருச்செந்தூரில் இருந்து பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் 28-ந் தேதி முதல் வரும் அக்டோபர் மாதம் 27-ந் தேதி வரை இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களில் மொத்தம் 13 பெட்டிகள் இருக்கும். 3 பொதுப் பெட்டிகளும், 6 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டடுக்கு ஏ.சி.பெட்டி ஒன்றும், மூன்றடுக்கு ஏ.சி.பெட்டி ஒன்றும், இரண்டு பார்சல் பெட்டிகளும் சிறப்பு ரெயிலில் இணைக்கப்பட்டிருக்கும்.

திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, நாசரேத், செய்துங்கநல்லூர், நெல்லை, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சிறப்பு ரயில்கள் மட்டும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது. பயணிகளிடத்தில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து சிறப்பு ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர்' வாராந்திர எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைவிட சிறப்பு ரயில்களின் பயண நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக இருக்கும்.

அறுபடை வீடுகளை இணைக்கும் ரயில்..

இந்த சிறப்பு ரயில்கள், முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளன.

அரக்கோணத்தில் இறங்கினால் - திருத்தணிக்குப் போகலாம். திண்டுக்கல்லில் இறங்கினால் பழனிக்கும், கரூரில் இறங்கினால் சுவாமிமலைக்கும், மதுரையில் இறங்கி பழமுதிர்ச்சோலை மற்றும் திருப்பரங்குன்றத்திற்கும் போகலாம்.

அறுபடை வீடுகளுக்கு சென்று வரும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

முருகனுக்கு உகந்த நாள் சனிக்கிழை என்பது ஐதீகம். எனவே அதற்கேற்ப இந்த சிறப்பு ரயில்கள் சனிக்கிழைதோறும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அடுத்த மாதம் முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் தினமும் காலை 8.35 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. அங்கிருந்து திருச்செந்தூருக்கு காலை 9.30 மணிக்கு புதிதாக இணைப்பு ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் பகல் 11.15 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

அதுபோல திருநெல்வேலியில் இருந்து மாலையில் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிப்பதற்கு வசதியாக திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த இணைப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மாலை 6.30 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலைப் பிடித்து சென்னை செல்ல முடியும். இந்த இணைப்பு ரெயிலை அடுத்தமாதம் முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+