இலங்கைக்கு ஐஎம்எப் கடன்-எதிர்ப்பை கைவிட்ட யு.எஸ்
கொழும்பு: சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் வலுவான ஆதரவு மற்றும் இலங்கை மீதான சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஆகிய காரணங்களால், இலங்கைக்கு கடனுதவி அளிக்க தெரிவித்து வந்த எதிர்ப்பை கைவிட்டுள்ளது அமெரிக்கா. இதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச நிதியத்தின் கடனுதவி கிடைப்பது உறுதியாகி விட்டது.
கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர் கடனுதவி இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.
ஜூலை 24ம் தேதி சர்வதேச நிதியத்தின் செயல் வாரிய கூட்டம் கூடுகிறது. அன்று கடனுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கு வசதியாக நிதியம் விதித்துள்ள சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக இலங்கை அரசு ஒப்புதல் கடிதத்தை வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மே 14ம் தேதி வன்னியில் போர் உச்சத்தி்ல் இருந்தபோது, இலங்கையில் பெருமளவில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டுக்கு கடன் உதவி தருவது பொருத்தமாக இருக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியிருந்தார். இதையடுத்து அமெரிக்காவின் எதிர்ப்பால் கடன் தொகையை தருவதை நிறுத்தி வைத்திருந்தது சர்வதேச நிதியம்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச அளவில் நடந்த தீவிரப் பிரசாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்கி வந்தது.
ஆனால் சமீப காலமாக அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளை இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பலித கொஹனா சந்தித்துப் பேசிய போது, கடன் உதவிக்கு எதிராக அமெரிக்கா முட்டுக்கட்டை போடவில்லை என்பதை அமெரிக்க தரப்பு தெளிவுபடுத்தியது. இதன் மூலம், அமெரிக்கா தனது எதிர்ப்பை கைவிட்டு விட்டது தெளிவானது.
அமெரிக்கா தனது எதிர்ப்பை திடீரென கைவிட முக்கிய காரணம் இந்தியா மற்றும் சீனாதான் என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதியத்தின் வாரிய உறுப்பினர்களிடையே இந்தியாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே எப்படியாவது இந்தியா மூலமாக இலங்கை கடனுதவியைப் பெற்று விடும் நிலை ஏற்பட்டது. அப்படி நடந்தால் அது அமெரிக்காவுக்கு பெரும் மூக்குடைப்பாகப் போய் விடும் என அமெரிக்கா பயந்தது.
மேலும், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வேளை சர்வதேச நிதியத்தின் கடன் தொகை கிடைக்காவிட்டால் சீனா முழுத் தொகையையும் கொடுத்து இலங்கையில் வலுவாக காலூன்றி விடும் அபாயமும் உள்ளது.
இந்தக் காரணங்களால்தான் தனது எதிர்ப்பை தடாலடியாக கைவிட்டு விட்டது அமெரிக்கா என்கிறார்கள்.
சமீபத்தில் இலங்கைக்கு 1.2 பில்லியன் டாலர் கடனுதவியை நீண்ட கால அடிப்படையில் வழங்க சீனா, இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும், மாத்தரை - கதிர்காமம் ரயில்வே பணிக்காக இலங்கை அரசுக்கு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக சீனா எக்ஸிம் வங்கி கடிதம் அனுப்பியது நினைவிருக்கலாம். இவற்றையெல்லாம் பார்த்துதான் தனது எதிர்ப்பு நிலையைக் கைவிட்டுள்ளது அமெரிக்கா எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
