எம்பிபிஎஸ் கிடைத்தும் பி.இ சேர்ந்த மாணவர்கள்!
சென்னை: எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் கிடைத்தும் அதைத் தவிர்த்துவிட்டு 12 மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட 12 இடங்களை நிரப்ப மீண்டும் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,483 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் அனுமதி தரவில்லை. இதனால் 85 இடங்கள் குறைந்துவிட்டன.
கடந்த 6ம் தேதி எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான மாணவவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடந்தது.
இந் நிலையில் முதல் கட்ட கவுன்சிலிங்கில் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்த மாணவ-மாணவிகளில் 12 பேர் அதில் சேராமல் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.
வரும் 24ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் உள்ளது. இதில் மேலும் சில மாணவர்களும் சேராமல் போக வாய்ப்புண்டு. இதனால் மொத்தமுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 24ம் தேதி மாலை தெரிந்துவிடும்.
அந்த காலியிடங்களுக்கும் இப்போது காலியாக உள்ள 12 இடங்களுக்கும் சேர்த்து மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது.
இந்த கவுன்சிலிங் முடிந்த பின் தர்மபுரி கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்தால் அங்குள்ள 85 இடங்களை நிரப்ப மீண்டும் ஒரு கவுன்சிலிங் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
கலைக் கல்லூரிகளில் கட்டணம் இல்லை..
இந் நிலையில் சட்டசபையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்,
அரசு பாலிடெக்னிக் இல்லாத மாவட்டங்களில் அதைத் தொடங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தேனி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாலிடெக்னிக் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.
மதுரையில் மேலூர் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரியை கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முயற்சி மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவில் மதுரை இருப்பதால் அழகிரி எடுத்துவரும் முயற்சிகளால் அங்கு அந்தக் கல்லூரி வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அரசுக் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அதன்படி கட்டணம் வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. எந்தக் கல்லூரியிலாவது கட்டணம் வாங்குவதாக கூறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications