சீனா-பிரிட்டனுக்கு புதிய இந்தியத் தூதர்கள்
டெல்லி: சீனாவுக்கான இந்தியத் தூதராக ஜெய்சங்கரும், பிரிட்டனுக்கான புதிய தூதராக நலின் சூரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது வெளியுறவுத்துறைச் செயலாளராக உள்ள சிவசங்கர மேனன் விரைவில் ஓய்வு பெறவுள்ளதால் அந்தப் பதவிக்கு சீனாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ், நியமி்க்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில் சீனாவுக்கான தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நலின் சூரி இப்போது வெளியுறவுத்துறையின் மேற்கு நாடுகள் பிரிவின் செயலாளராக உள்ளார். இப்போது பிரிட்டனில் தூதராக உள்ள சிவசங்கர் முகர்ஜி அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ளார்.
வெளியுறவுத்துறைச் செயலாளராக சூரி தீவிரமாக முயன்று வந்தார். ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு நிருபமாவை நியமித்துள்ளது மத்திய அரசு. நிருபமா இலங்கையிலும் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள் ஜெய்சங்கர் இப்போது சிங்கப்பூரில் இந்தியத் தூதராக உள்ளார். இதற்கு முன் வெளியுறவுத்துறையில் அமெரிக்கப் பிரிவுக்கான செயலாளராக இருந்த ஜெய்சங்கர் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்தானதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
ஜெய்சங்கர் சீனத் தூதர் ஆவதால் சிங்கப்பூருக்கான தூதராக ராகவன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இவர் இப்போது வெளியுறவுத்துறையின் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் விவகாரங்களுக்கான இணைச் செயலாளராக உள்ளார்.












Click it and Unblock the Notifications