நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு கருணாநிதி தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
சென்னை: மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நமது அண்டை மாநிலங்களுடன் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் நடந்து வரும் காரியங்களைப் பார்த்தால் ஏ தாழ்ந்த தமிழகமே!' என்ற வேதனையில் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் துடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முல்லை பெரியாறு அணை எங்கள் மண்ணில்தான் இருக்கிறது; தண்ணீரும் எங்களுக்குத்தான் சொந்தமானது; எனவே, அந்த அணையை இடித்துவிட்டு நாங்கள் விரும்புகிற இடத்தில் புதிய அணையை கட்டியே தீருவோம்'' என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணை மற்றும் அதன் நீர்பகிர்வு குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம் என்று தமிழகத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்று மூத்த தலைவர் ஒருவரே அம்மாநில சட்டசபையில் பேசியிருக்கிறார்.
20 ஆண்டு காலமாக இந்த பிரச்சினைக்கு நம்மால் தீர்வு காண முடியவில்லை. அணை இடிக்கப்பட்டுவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன வசதி பாதிக்கப்பட்டு அவை பாலைவனமாகும் ஆபத்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
நெற் களஞ்சியங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மூன்றுபோக நெல் சாகுபடி என்பது பழங்கதையாகிவிட்டது. ஒருபோக சாகுபடிக்கே தண்ணீர் கிடைக்குமா? என்ற ஏக்கப் பெருமூச்சுடன் உழவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் முதலான அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே உபரித் தண்ணீர் தமிழகத்தை எட்டிப்பார்க்கும் நிலைமை நிரந்தரமாகிக் கொண்டிருக்கிறது.
1924-ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளை மீறி 1968-ம் ஆண்டு முதல் கர்நாடகம் புதிய அணைகளை கட்டத் தொடங்கியது. அதனை அப்போது தடுத்து நிறுத்த தமிழகம் தவறி விட்டது. அதன் விளைவாக தேவைக்கு அதிகமான அளவில் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டு, பாசனப் பகுதிகளை விரிவுபடுத்தி கர்நாடகம் பலனடைந்து வருகிறது.
கர்நாடக அணைகள் எப்போது நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி நிற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
வடக்கே பாலாற்றின் குறுக்கே கடைசி தடுப்பணையையும் கட்டி முடிக்க ஆந்திரா உறுதியாக இருக்கிறது. தமிழக எல்லையையொட்டிய குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்போகிறோம் என்று 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஆந்திர முதல்வர் தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த தடுப்பணை கட்டப்பட்டால், மாநிலத்தின் வடமாவட்டங்களும் பாலைவனமாக மாறிவிடும்.
இப்படி நம்மைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களெல்லாம் தமிழக நலனுக்கெதிராக இப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகமோ உச்சநீதிமன்றத்தின் கதவுகளை மட்டுமே தட்டிக் கொண்டிருக்கிறது. காமராஜர் காலத்தைப் போன்று மத்தியில் உள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு இந்த ஆற்றுநீர் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications