இளையாங்குடி: கூட்டு சேர ஆளில்லை-கம்யூ. போட்டியில்லை
சென்னை: இளையாங்குடிய சட்டசபை இடைத் தேர்தலில் நட்புக் கட்சிக்கு ஒதுக்குவோம் என கூறியிருந்த இரு இடதுசாரி கட்சிகளும் அதற்குறிய கட்சி கிடைக்காததால் அங்கு போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளன.
கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம், இளையாங்குடி சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனி அணியாக போட்டியிடுகின்றன.
தலா 2 தொகுதிகளில் போட்டியிடும் இக்கட்சிகள், இளையாங்குடி தொகுதியில் நட்புக் கட்சி ஒன்றுக்கு ஆதரவு தருவோம் என கூறியிருந்தன.
மனித நேய மக்கள் கட்சியை இங்கு போட்டியிடுமாறு அவை கோரி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தக் கட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது.
மேலும், சரத்குமாரின் கட்சியும் போட்டியிடவில்லை. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நட்பு கட்சி எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இங்கு போட்டியிடுவதில்லை என்ற முடிவை இரு கட்சிகளும் எடுத்துள்ளன.
இதுதொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இடையே செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, இளையாங்குடியில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியான பின், அவர்களில் யாராவது சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications