ரூ.2 கோடி டிடி: சி.பி.ஐ. விசாரிக்க முடியாது-ஜெ மனு
சென்னை: தனக்கு வந்த ரூ.2 கோடி பரிசு வழக்கை சிபிஐ விசாரிக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனுதாக்கல் செய்துள்ளார்.
1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தனது பிறந்தநாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடினார். அப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள 89 டிமாண்ட் டிராப்டுகள் (டி.டி) அவருக்கு பரிசாக வந்தன.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் 57 பேர் பெயரில் இந்த டிராப்டுகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த டி.டிக்களை யார் அனுப்பினர் என்று ஜெயலலிதாவுக்குத் தெரியாதாம். ஆனால், அந்த டிடிக்களை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொண்டார்.
முதல்வராக இருக்கும் ஒருவருக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதை மீறி தனது கணக்கில் ரூ. 2 கோடியை வரவு வைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
இது குறித்து வருமான வரித்துறை தந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, இந்த டி.டி. மோசடி வழக்கில் அவருக்கு உறுதுணையாக இருந்த மாஜி மந்திரிகள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவி்ன் சார்பில் அவரது வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
என் மீதான புகாரை முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஊழல் தடுப்பு சட்டம் 13(2), 13(1)(இ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பு 3.8.1996ல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை முதலான ஆவணங்களை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகை நகல் எனக்கு வழங்கப்பட்டதை தவிர, இந்த அறிவிப்பு ஆணை நகல் வழங்கப்படவில்லை. ஊழல் தடுப்பு சட்டம் 13வது பிரிவின்கீழ் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யப்பட்ட வழக்கை, 11வது சட்டப்பிரிவின்கீழ் விசாரணை செய்ய சிபிஐக்கு அதிகாரம் கிடையாது. இந்த வழக்கில் எனக்கு வழங்காத அறிவிப்பு ஆணை நகலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதையடுத்து நீதிபதி முகமது இஷாத் அலி இந்த மனு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications