சென்னையில் பன்றி கறிக்கு தடை
சென்னை: பன்றிக் காய்ச்சல் சென்னையிலும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிக் கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் சிறுவன் ஒருவன் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளனர்.
பன்றிக்காய்ச்சல் பீதி காரணமாக முன் எச்சரிக்கையாக நிறைய பேர் சைவ உணவுக்கு மாறி காய்கறிகளை வாங்குவதால் ஆடு-மாடு இறைச்சி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
பெரம்பூர்-வில்லிவாக்கம், சைதாப்பேட்டை ஆடு தொட்டிகளில் தினமும் 1500 ஆடுகள் வெட்டப்பட்டு சென்னை நகரில் உள்ள சிறிய கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதேபோல் மாடு இறைச்சி பெரம்பூரில் வெட்டப்பட்டு அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆடு, மாடு இறைச்சி விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக கடைக்காரர்கள் கூறினர். ஆனால் கோழி விற்பனை எப்போதும் போல் உள்ளதாக தெரிவித்தனர்.
ஆடு, மாடு வெட்டும் போது தினமும் சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றி சுத்தமாக வைத்திருக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை நகரில் பன்றிக்கறி விற்கவும், பன்றி வளர்க்கவும் ஏற்கனவே தடை உள்ளது. இதையும் மீறி யாராவது பன்றிக்கறி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இறைச்சி கூடங்கள், கறி கடைகளில் வெட்டப்படும் இறைச்சிகளையும் அதிகாரிகள் சென்று சுத்தமான முறையில் அவை பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்கின்றனர்.
பன்றி காய்ச்சலுக்கும், பன்றிக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் கூட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற நோய் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications