அத்வானி வீட்டு முன் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா

பாஜகவி்ல் கோஷ்டிப் பூசல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அத்வானி கோஷ்டியைச் சேர்ந்த ராஜஸ்தான் முனனாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியிருந்து விலகுமாறு கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பதவி விலக மறுத்துவிட்ட வசுந்தரா தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 56 பேரை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வசுந்தரா ராஜேவுக்கும் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்குக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் தான். இருவருமே எப்போதும் மோதலில் இருப்பவர்கள். இந் நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. ராஜே முதல்வர் பதவியை இழந்தார்.
தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலிலும் இந்த மாநிலத்தில் பாஜக மண்ணைக் கவ்வியது. இதையடுத்து ராஜேவிடம் உள்ள எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று ஜஸ்வந்த்-ராஜ்நாத் சிங் கோஷ்டி கோரியது.
ஆனால், இதை அத்வானி ஏற்கவில்லை. காரணம், ராஜே அவரது கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந் நிலையில் அத்வானியின் எதி்ர்ப்பையும் மீறி பதவி விலகுமாறு ராஜேவுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்துவிட்ட ராஜே, கட்சியை உடைக்கவும் தயங்க மாட்டேன் என்பதைக் காட்டும் வகையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 56 பேரை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த மாநிலததில் மொத்தம் 78 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதில் 56 பேரை நேற்று டெல்லிக்கு அனுப்பி ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார் ராஜே.
இந்த 56 பேரும் ராஜேவை நீக்கக் கூடாது என்று கையெழுத்திட்ட மனுவை அத்வானியிடம் வழங்க திட்டமிட்டனர். இதற்காக அவரைச் சந்தி்க்க அவரது இல்லத்துக்கு இன்று காலை சென்றன்.
ஆனால், இவர்களைச் சந்தித்தால் கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத், ஜஸ்வந்த், யஷ்வந்த், முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் மோதல் உருவாகும் என்பதால் இந்த எம்எல்ஏக்களை சந்திக்க அத்வானி மறுத்துவிட்டார்.
முன் அனுமதி பெற்று வந்தால் தான் சந்திக்க முடியும் என்று கூறிவிட்டார். இதையடுத்து 56 எம்எல்ஏக்களும் அத்வானியின் வீட்டின் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் கட்சியின் படுதோல்வி குறித்து சிம்லாவில் கட்சியின் உயர் மட்டக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் ராஜஸ்தானில் இந்த சிக்கல் வெடித்துள்ளது.
முதலில் இந்த தோல்வி குறித்து விவாதிப்பதையே அத்வானி- சுஷ்மா சுவராஜ்- அருண் ஜேட்லி கோஷ்டி தவிர்க்கப் பார்த்தது. ஆனால் வேட்பாளர் தேர்வில் ஆரம்பித்து தேர்தலின் அனைத்து விவகாரங்களையும் கையாண்ட இந்த மூவருக்கும் எதிராக ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆதரவாளர்கள் கொடி தூக்கியதால் சிம்லாவில் இந்தக் கூட்டத்தை நடத்த அத்வானி முன் வந்தது நினைவுகூறத்தக்கது.
இப்போது ராஜேவுக்கு ஆதரவு தெரிவித்தால் சிம்லா கூட்டத்தில் தனக்கு எதிராக இந்தத் தலைவர்கள் குரல் எழுப்புவார்கள் என்பதால் அத்வானி அமைதி காப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications