ஈழத்திற்காக தொடர்ந்து போராடுவோம்-திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுதம் ஏந்தாத புலிகளான விடுதலைச் சிறுத்தைகள், சுதந்திர தமிழ் ஈழத்திற்காக தொடர்ந்து போராடுவார்கள் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

திருமாவளவன் தனது பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறார். தனது 48வது பிறந்த நாளையொட்டி சென்னையில் 'எழும் தமிழ் ஈழம்' என்ற பெயரில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் திருமாவளவன் பேசுகையில்,

எழும் தமிழ் ஈழம் என்ற பெயரில் இன விடுதலை அரசியல் மாநாடு நடத்துகிறோம். விளம்பர தட்டிகளைத் தான் காவல்துறையினர் கிழிக்க முடியும். எங்கள் எழுச்சியை அழிக்க முடியாது. நாம் இந்த இயக்கத்தை கட்டுப்பாடாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்மை சீண்டுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை நடத்த விடாமல் சீர்குலைத்துவிட வேண்டும் என்று கருதி பேனர்களை கிழித்து எறிந்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எழும் தமிழ் ஈழம் என்பதில் என்ன தவறு இருக்கிறது.

திமுக அரசுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்று தெளிவாக இருக்கிறோம். அதில் இருந்து மாற மாட்டோம். இந்திய அரசு தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று நாடாளுமன்றத்தில் பேசினேன்.

நாம் எடுத்துக் கொண்ட நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். தமிழ் ஈழம் கோரிக்கை நின்றுவிடவில்லை, தோற்றுவிடவில்லை. அந்த கோரிக்கை இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு தான் இந்த மாநாடு.

ஓராண்டுகளாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடிய கட்சி விடுதலை சிறுத்தைகள். உலகத் தமிழர்களுக்கு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயாராக இருப்போம். பிரபாகரன் இல்லை என்று ராஜபக்சே சொல்கிறார். ஒரு இயக்கத்தை அழித்து விட்டதாக சொல்கிறார்.

பிரபாகரன் இல்லை என்றால் இலங்கை நாடாளுமன்றத்திலே சொல்ல வேண்டியது தானே? இறப்பு சான்றிதழ் இந்தியா கேட்கிறதே, தர வேண்டியது தானே? அவர் இருக்கிறார், மீண்டும் வருவார், மீண்டும் ஈழ விடுதலை போர் நடக்கும். இந்த உணர்வை தமிழகத்திலே அடைகாப்பது தான் திருமாவளவனின் கடமை.

ஆயுதம் ஏந்தாத விடுதலைச் சிறுத்தைகள், சுதந்திர தமிழ் ஈழத்திற்காக தொடர்ந்து போராடுவார்கள்.

இறையாண்மைக்கு கட்டுப்படுவோம், அதற்காக ஈழத் தமிழர்களை அழிக்கிற துரோகத்தை தோலுரிக்காமல் இருக்க முடியாது. அந்த துரோக செயலை நாம் இருக்கிற இந்தியா செய்திருக்கிறது.

ஒரு காலத்தில் பா.ம.க. இருக்கிற அணி தான் வெற்றி பெறும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது பா.ம.க. இல்லாத அணி, விடுதலை சிறுத்தைகள் இருக்கிற அணி வெற்றி பெறும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எதிரிகளின் முட்டுக்கட்டையை எல்லாம் உடைத்தெறிந்து விடுதலை சிறுத்தைகள் 2 எம்.எல்.ஏ.க்களையும், ஒரு எம்.பியையும் பெற்றிருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் இனி விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அணியும் வெற்றி பெறமுடியாது, ஆட்சியை கைப்பற்றிவிட முடியாது. 2011யை நோக்கி நமது பயணம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இனி நாடாளுமன்றத்திலும் ஒற்றை சிறுத்தை அல்ல, ஏராளமான சிறுத்தைகள் இருப்பார்கள். ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதும், சாதி ஒழிப்புக்காக போராடுவதும் தான் நமது முக்கிய நோக்கமும், இந்த மாநாட்டின் முக்கிய செய்தியுமாகும் என்றார்.

மாநாட்டில், இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கும் 3 லட்சம் தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமரச் செய்ய விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை அனைத்து நாடுகளும், ஐ.நாவும் வலியுறுத்த வேண்டும்.

தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்க, இந்திய அரசுகள் விடுதலை புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து விலக்கி அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேனர்கள், போஸ்டர்களில் ஈழம் அழிப்பு...

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைத்திருந்த பேனர்கள், போஸ்டர்களில் இடம் பெற்றிருந்த ஈழம் என்ற வார்த்தையை போலீஸார் அழிக்கும் வேலையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் விடாமல் அனைத்து பேனர்கள், போஸ்டர்களிலும் இருந்த ஈழம் என்ற வார்த்தையை அழிக்கும் பணியை போலீஸார் தொடர்ந்தனர்.

தொண்டர்களால் பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள்...

இதற்கிடையே, மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் சொல்லொணாத் துயரத்தை சந்தித்தனர். அனைத்து தென் மாவட்ட ரயில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ரயில் பெட்டிகளில் ஏறிக் கொண்ட அவர்கள் இஷ்டத்திற்கு சத்தம் போட்டுக் கத்தியும், ரகளை செய்தும், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுப்பதுமாக அட்டகாசம் செய்தனர். இதனால் நள்ளிரவு வரை ரயிலைக் கிளப்பாமல் ரயில்வே நிர்வாகம் இருந்தது.

இதனால் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் கடும் வேதனையும், கோபமும் அடைந்தனர். இதனால் மதுரை வழியாக சென்னை வரும் ரயில்களும் பாதிக்கப்பட்டன.

நள்ளிரவுக்கு மேல்தான் ரயில்கள் மதுரையிலிருந்தும், மதுரை வழியாகவும் செல்ல முடிந்தது.

விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அட்டகாசம் காரணமாக,
காலை 6.30 மணிக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 8.35 மணிக்கும், காலை 7.40 மணிக்கு வரவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 9.45 மணிக்கும், காலை 8 மணிக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் காலை 9.45 மணிக்கும் வந்து சேர்ந்தது.

மக்களுக்காக, மக்களை நம்பி கட்சி நடத்துவோர் இப்படித்தான் அப்பாவி மக்களை அநியாயத்திற்கும் படுத்துவதா..?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+