இலங்கையில் கொடுமை: முகாம்களில் வெள்ளம்-5 தமிழர்கள் பலி
வவுனியா: இலங்கையில் பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தில் சிக்கித் தவித்துள்ள அகதி வாழ் அப்பாவித் தமிழர்கள் மத்தியில் நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. இதற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
வன்னிப் பகுதியை புலிகளிடமிருந்து மீட்ட இலங்கை ராணுவம், கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை, அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளி சிறைச்சாலை போன்ற கொட்டடிகளில் தங்க வைத்துள்ளது.
அவர்கள் எங்கும் வெளியேற முடியாத அவலம். முட்கம்பிகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு எப்போது விடுதலை ஆவோம் என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு துயரமாக, பெரும் மழை பெய்து முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. ஆனால் அவர்களை அங்கிருந்து காப்பாற்ற வேண்டிய அரசு மனிதாபிமானமே இல்லாமல், அந்த இடத்திலேயே அவர்களை தொடர்ந்து முடக்கி வைத்துள்ளது.
இதனால் உலகிலேயே யாரும் இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருக்க முடியாது என்று கூறும் அவல நிலையில் தமிழர்கள் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கழிவு நீர் உள்ளிட்டவை தண்ணீரில் கலந்து தேங்கிக் கிடப்பதாலும் தொற்று நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், வவுனியா முகாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். நான்கு பேர் குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
முகாம்களில் சேறும், மனித கழிவும் சேர்ந்துள்ளது. சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் உள்ள முகாம்களில் பெருமளவுக்கு தொற்று நோய் பரவுகிறது. செட்டிகுளம் பகுதியில் உள்ள 13 முகாம்களில் வயிற்றுப்போக்கு நோய் பரவியுள்ளது.
அங்குள்ள முகாம்களில் 735 பேர் வயிற்று போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 251 பேர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றோட்டத்துடன் 120 பேருக்கு அம்மை நோயும் பரவியுள்ளது.
தமிழர்களின் நிலைமை மோசமாகி வரும் நிலையில் அதைத் துடைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளது இலங்கை அரசு.


Click it and Unblock the Notifications
