ரூ1.5 கோடி மோசடி-சிபிஐ பிடியில் காங் பிரமுகர்
சென்னை: போலி பத்திரம் கொடுத்து சென்னை வங்கியில் கடன் வாங்கி ரூ. 1.5 கோடி மோசடி செய்த ராமநாதபுரம் காங்கிரஸ் பிரமுகர் மற்றும் அவரது மகனை சிபிஐ கைது செய்தது.
கமுதி ஒன்றிய காங்கிரஸ் செயலாளராக இருப்பவர் பி.கே.கிருஷ்ணன். இவர் கடந்த 2004ம் ஆண்டு சென்னை கே.கே. நகர் பாங்க் ஆப் பரோடாவின் கிளையில், தனது பி.கே.கே அறக்கட்டளைக்கு ரூ. 1.5 கோடி கடன் கோரி விண்ணப்பம் செய்தார். கடனுக்கு ஜாமீனாக சென்னை, வியசார்பாடியில் இருக்கும் 5 கிரவுண்ட் நிலத்தின் பத்திரத்தை கொடுத்தார்.
இதையடுத்து கடன் தரப்பட்டது. ஆனால், அதை ஒழுங்காக திருப்பி்ச் செலுத்தவில்லை. வங்கி அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கவில்லை. பி.கே.கே அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனராக இருக்கும் அவரது மகன் ராமமூர்த்தியையும் வங்கி அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அவரும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து வங்கி அவர்கள் தந்த நில பத்திரத்தைக் கொண்டு நிலத்தை கையப்படுத்த முயன்றது.
இடத்தைப் பார்க்க வங்கி அதிகாரிகள் சென்றபோது அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வணிக வளாகம் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
ஆனால், பத்திரத்தில் காலிமனை என்று இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில், பி.கே.கிருஷ்ணன் வங்கி அதிகாரிகளிடம் வழங்கிய பத்திரத்தில் அந்த இடம் பழனி என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது தெரிந்தது.
அவரிடம் சிபிஐ விசாரித்தபோது ஏற்கனவே மற்றொருவருக்கு விற்பனை செய்த இடத்தை, பி.கே.கிருஷ்ணன் கேட்டு கொண்டதற்கு ஏற்ப அவருக்கு விற்பது போன்ற போலி பத்திரம் எழுதி கொடுக்க உடந்தையாக இருந்ததை ஒப்புகொண்டார்.
இதையடுத்து சிபிஐ கிருஷ்ணனையும், அவரது மகன் ராமமூர்த்தி மற்றும் பழனி ஆகிய மூவரையும் தேதி கைது செய்துள்ளது.












Click it and Unblock the Notifications