ராகிங்:9 மாணவர்களுக்கு 2 ஆண்டு தடை-பல்கலை. அதிரடி

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்சிஏ படிக்கும் பல்பீர் சந்த் என்ற மாணவன், சீனியர்கள் தன்னை ராகிங் செய்வதாக டீனிடம் புகார் செய்தார்.
இதையடுத்து கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு குழுவினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அவர்கள் கல்லூரியை சேர்ந்த சபர்மதி விடுதியில் ராகிங் செய்த நான்கு மாணவர்களை கையும், களவுமாக பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிட்டி அமைத்து மேலும் 14 மாணவர்களுக்கு கடந்த 18ம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர்கள் கொடுத்த விளக்கத்தால் பல்கலைக்கழகம் திருப்தி அடையவில்லை.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ராகிங் செய்ததற்காக 9 மாணவர்களை நீக்கியுள்ளது. இவர்கள் கல்லூரிக்குள் நுழைய இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
ராகிங் சம்பவத்தை தட்டி கேட்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 3 மாணவிகள் உட்பட 10 பேரை விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளது. ஆனால், அவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி கொடுத்துள்ளது.
வேடிக்கை பார்த்தாலும் குற்றம் தான்...
இது குறித்து கல்லூரியின் துணை வேந்தர் பாட்டாச்சார்யா கூறுகையில்,
இது கடுமையான தண்டனை தான். இருந்தாலும் இது தான் இந்த பல்கலைக்கழகத்தில் முதலும் முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.
மாணவர்கள் சேர்க்கையின் போது ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்துவிட்டு அது போன்ற செயல்களில் ஈடுபடுவது கஷ்டமாக இருக்கிறது. ராகிங் செய்பவர்களுக்கு மட்டுமல்ல அதை தடுக்க முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications