இரட்டை கொலை-விஜயகாந்துக்கு சிபிசிஐடி சம்மன்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: சென்னை நீலாங்கரையில் நடந்த இரட்டை கொலையில் ஆளும் கட்சியினருக்குத் தொடர்பிருப்பதாக அறிக்கை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் கொலை தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நீலாங்கரையை அடுத்த பனையூரில் இளங்கோவன், அவரது மனைவி ரமணி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

இந் நிலையில் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக விஜய்காந்த் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் வீட்டுக்குள் இருந்தாலும் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை வளர்ந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கனிமவள நிறுவன முன்னாள் தலைவர் சரவணனும் அவரது குடும்பத்தினரும் வீட்டிலேயே கொல்லப்பட்டார்கள். 24-ந் தேதி பனையூரில் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோவனும் அவரது குடும்பத்தினரும் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை என்பது மட்டுமல்ல, செயல்பட ஆளும் கட்சியினர் விடுவதில்லை என்பதும் தான்.

பனையூரில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட சண்முகராஜன் என்பவரை பொதுமக்களே பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். சண்முகராஜன் போலீசில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தொடர்பு பற்றி கூறியதாலேயே போலீஸ் நிலையத்திலேயே அவர் மரணத்தை சந்தித்தார் என்று மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

சண்முகராஜன் உடலையும் போலீஸ் துணையோடு அவசரம் அவசரமாக எரித்து விட்டனர். இதன் மூலம் இந்த கொலை சம்பந்தமான உண்மையையே எரித்துவிட்டனர்.

இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள், துப்பாக்கிகள், உடன் வந்தவர்கள் என்று எல்லா தடயங்களும் மறைக்கப்பட்டுவிட்டன என்றும், இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பேச்சு அடிபடுகிறது.

முதலில் வெளிநாட்டு துப்பாக்கி காட்டப்பட்டது. பிறகு பீகாரில் வாங்கிய நாட்டு துப்பாக்கி என்று சொல்லப்படுகிறது. கள்ளதுப்பாக்கி என்றனர், பிறகு லைசன்ஸ் உள்ளது என்கின்றனர்.

நாங்குநேரியை சேர்ந்த ஒரு பைக்கின் நம்பர் இங்கு பயன்படுத்தப்பட்ட காரில் நம்பர் பிளேட்டாக காட்டப்பட்டது. பிறகு அம்பாசிடர் கார் என்று சொல்லப்படுகிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வருகின்றன.

இந்தக் கொலையில் உண்மையான விசாரணை நடைபெறாது என்றும், வழக்கு விசாரணை நிலையிலேயே குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்றும் மக்கள் பேசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அதையும் மக்கள் நம்பத்தயாராக இல்லை.

இந்த வழக்கில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவிடப்படுமா? புலன்விசாரணை நியாயமாக நடைபெறுமா? உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? அவர்கள் ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா? முறையாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? அவர்களுக்கு தக்க ஆதாரங்கள் மூலம் காவல்துறை தண்டனையை பெற்றுத்தர முன்வருமா? இந்த கேள்விகளை நான் மட்டுமல்ல, தமிழ்நாடே கேட்கிறது.

முன்பு காவல்துறையின் கல்லீரல் கெட்டுப் போய் விட்டது என்றார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இப்போதோ காவல்துறைக்கு கல்லீரலே இல்லை.

ஜனநாயகத்தில் ஆட்சி நிரந்தரம் என்று நினைக்கக் கூடாது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போது மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். உண்மை என்றும் உறங்குவதில்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

சிபிசிஐடி சம்மன்:

இதைடுத்து விஜயகாந்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் நேரில் வந்து தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து விஜயகாந்த் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்மனுக்கு அவர் பதில் அனுப்புவார் என்று தெரிகிறது.

டி.ஜி.பி. ஜெயின் அறிக்கை:

இந் நிலையில் காவல்துறை டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இளங்கோவன்-அவரது மனைவி ரமணி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்துவரும் நிலையில் இதுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அரசியல் கட்சி தலைவர்களும் இந்தவழக்கு விசாரணை பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற தகவல்கள் போலீசாரின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஹூண்டாய் கார் திருடப்பட்டு ராஜா முகமது என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காரை திருடியவர்கள் மாற்று பதிவு எண்ணுடன் இதை கொலைக்குப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணையின்போது இறந்துபோன ராஜனின் உடலை போலீசாரின் உதவியோடு எரித்ததாக குற்றம் சாட்டுவது விஷமத்தனமானது. இந்த வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் முறைப்படி விசாரணை அதிகாரிகளிடம் கூறினால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

கேப்டன்-மனைவி உடல் தகனம்

இந் நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவன் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

கடந்த ஐந்து நாட்களாக இளங்கோவன், ரமணியின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இளங்கோவனின் 2 மகன்கள் வெளிநாடுகளில் இருந்ததால் அவர்களின் வருகைக்காக உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இரு மகன்களும் வந்து சேர்ந்ததால் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று காலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

மணல் கடத்தல் கும்பலுக்குத் தொடர்பா?:

இந்தக் கொலையில் சண்முகராஜன் தவிர நெல்லை மணல் கடத்தல் கும்பல் ஒன்றுக்கும் தொடர்பு இரு்பபதாகக் கூறப்படுகிறது.

வழக்கில் முக்கிய சாட்சியான இளங்கோவனின் மருமகள் வசந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இளங்கோவனுக்கு சொந்தமான 157 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் போட்டியில்தான் இக்கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கிரானைட் கற்கள் புதைந்து கிடக்கும் அந்தபூமி விலை மதிப்பற்றது என்று தெரியவந்தது. அதனை விற்கும் முயற்சியில் இருந்து இளங்கோவன் பின் வாங்கியுள்ளார்.

இதன் காரணமாகவே கொலையாளி சண்முகராஜனுக்கு அளித்திருந்த அதிகாரத்தையும் இளங்கோவன் ரத்து செய்துள்ளார்.

இதனால் 157 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக காத்திருந்த 2 முக்கிய புள்ளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களில் ஒருவர்தான் நெல்லையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர். மணல் கடத்தல் சம்பவத்திலும் இவரது ஆட்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இக்கும்பலை சேர்ந்தவர்கள்தான் சண்முகராஜனிடம் துப்பாக்கியை கொடுத்து அனுப்பியுள்ளனர் என்று தெரிகிறது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து நில ஆவணங்களை பறிப்பதற்கும், இளங்கோவனின் குடும்பத்தை தீர்த்துக் கட்டுவதற்கும் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பின்னர் சண்முகராஜனுடன் வேறொருகாரில் சென்ற முக்கிய புள்ளிகள் நோட்டம் பார்த்து அவரை உள்ளே அனுப்பியுள்ளனர். ஆனால் சண்முகராஜன் மாட்டிக் கொண்டதால் காரில் இருந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

இந்த நிலையில், பிரச்சினைக்கு காரணமான 157 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு விலை பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கும் முக்கிய பிரமுகர் ஒருவர் மீடியேட்டராக இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஏகப்பட்ட யூகங்கள் உலா வந்து கொண்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+