கேரள மாணவிகளை காதல் வலை வீசி தீவிரவாதத்திற்கு இழுக்கும் தீவிரவாதிகள்

இதுகுறித்து கேரள மாநில காவல்துறை டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் கூறுகையில், இந்த சதித் திட்டம் குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வரும் இரு மாணவிகளின் பெற்றோர் சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தனர்.
அந்த இரு மாணவிகளும் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். அந்தக் கல்லூரியில் படித்து வந்த சீனியர் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்த பெற்றோர்களின் இரு மகள்கள் உள்பட நான்கு மாணவிகளுக்கு காதல் வலை வீசியுள்ளார்.
ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர்களுடன் அவர் காதல் லீலை புரிந்துள்ளார். பின்னர் அவர்களது மனதைக் கலைத்து முஸ்லீமாக மாறுமாறு வலியுறுத்தியுள்ளார். இதைக் கேட்டதும் ஒரு மாணவிக்கு அந்த மாணவர் மீது சந்தேகம் வந்து விலகிக் கொண்டு விட்டார். இன்னொரு மாணவிக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற இரு மாணவிகளும், அந்த மாணவர் சொல்வதைக் கேட்பதாக கூறி அவருடன் கிளம்பிச் சென்று விட்டனர். இந்த இரு மாணவிகளின் பெற்றோர்கள்தான் தற்போது உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இரு மாணவிகளையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. போலீஸாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இரு மாணவிகளையும் கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினர்.
இதையடுத்து இரு மாணவிகளையும் ஒரு வாரத்திற்கு பெற்றோருடன் இருக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ஒருவாரம் இரு மாணவிகளும் பெற்றோருடன் தங்கினர்.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரும் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில், எங்களை மோசடியாக அந்த மாணவர் காதல் வலையில் வீழ்த்தி அழைத்துச் சென்றார்.
மீண்டும் அவருடன் செல்ல நாங்கள் விரும்பவில்லை. எங்களில் ஒருவரை அந்த மாணவர் மணந்து கொண்டார். இன்னொருவரை, அவரது நண்பரான பஸ் கண்டக்டர் ஒருவருக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.
நாங்கள் அந்த மாணவரின் கஸ்டடியில் இருந்தபோது எங்களுக்கு தீவிரவாத குழுக்கள் குறித்தும், அவர்களின் போராட்டம் குறித்தும் விளக்கும் வீடியோவைப் போட்டுக் காட்டினார். இதைப் பார்த்து நாங்கள் சந்தேகமடைந்தோம், பயந்தோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸாரும், கல்லூரி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட இரு மாணவிகளின் அறையில் சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாத குழுக்கள் குறித்தும், அவற்றின் கொள்கைகளை விளக்கும் பிரசுரங்கள் உள்ளிட்டவை சிக்கின.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள கேரள காவல்துறை தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் விசாரணை மற்றும் சோதனைகளை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications