எரிவாயு விவகாரம் - ரிலையன்ஸுக்கு எதிராக என்டிபிசி வழக்கு
டெல்லி: எரிவாயு விவகாரம் தொடர்பான வழக்கில் தனது மனுவை திருத்தி சமர்ப்பிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து அரசு நிறுவனமான என்டிபிசி (NTPC) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கோதாவரி படுகையில் எடுக்கப்பட்டு வரும் எரிவாயுவை யூனிட்டுக்கு 4.2 டாலர் விலையில் விற்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தது ரிலையன்ஸ். ஆனால் அரசு நிறுவனமான என்டிபிசிக்கு மட்டும் 2.34 டாலருக்கு விற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்பானிகள் குடும்பத்துக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் நிறுவனத்துக்கு 2.34 டாலருக்கு எரிவாயுவை விற்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள மத்திய அரசு, அரசுக்கு சொந்தமான எரிவாயுவை எடுத்துத்தரும் காண்டிராக்டர் வேலைதான் ரிலையன்சுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் குடும்ப நலனுக்காக போட்ட ஒப்பந்தப்படி விலை நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நிறுவனத்துக்கு என்ன விலைக்கு எரிவாயுவை விற்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு என வழக்கில் அரசுத் தரப்பு கூறியுள்ளது.
இன்னொரு பக்கம், அரசு நிறுவனமான என்டிபிசியும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தன்னிச்சையான, முறையற்ற இந்த விலை நிர்ணயத்தை அனுமதித்த மும்பை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications