14 முதல் சென்னை-டெல்லி நான் ஸ்டாப் ரயில்
சென்னை: டெல்லி முதல் சென்னை இடையிலான நான் ஸ்டாப் அதி வேக ரயிலை செப்டம்பர் 14ம் தேதி சென்னையில் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தொடங்கி வைக்கிறார்.
ரயில்வே பட்ஜெட்டில் டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு எங்கும் நிற்காமல் செல்லும் நான் ஸ்டாப் டுரான்டோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை - டெல்லி இடையிலான இந்த ரயில் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மமதா பானர்ஜி கலந்து கொண்டு நான் ஸ்டாப் ரயிலை தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில் ராஜதானி ரயிலைப் போல செயல்படும். சென்னையில் இந்த ரயிலில் ஏறினால் 28 மணி நேரத்தில் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். வழக்கமாக டெல்லிக்குப் போகும் நேரம் 34 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கும். இந்தப் பெட்டிகள் அனைத்தும் எவர்சில்வரால் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்த்கது.
விரைவில் இந்தப் பெட்டிகள் சென்னை வரவுள்ளன. அதன் பின்னர் புதிய கலர் கொடுக்கப்படும். இதன் மூலம் டுரான்டோ எக்ஸ்பிரஸை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ள முடியும்.
இந்த ரயிலில் ஒரு ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி, 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், உணவகத்திற்காக (பான்ட்ரிகார்) ஒரு பெட்டி, கார்டுகளுக்காக 2 பெட்டிகள் ஆக மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும்.
திங்கட்கிழமை காலை 6.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு டெல்லி போய்ச்சேரும்.
அதுபோல புதன்கிழமை காலை 6.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு டெல்லி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டெல்லியில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னைக்கு புறப்படும்.
சென்னை டெல்லி சென்னை டுரான்டோ எக்ஸ்பிரஸில், பான்ட்ரி காருக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொள்ளவும், தேவைப்படும் இடங்களில் ரயில் பெட்டி டேங்குகளுக்கு தண்ணீர் நிரப்பவும், ரயில் என்ஜின் டிரைவர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், கார்டுகள் ஆகியோர் பணிமாறுவதற்காகவும் என்று மூன்று தடவை மட்டும் நின்று செல்லும்.
இதற்காக விஜயவாடா, நாக்பூர், போபால் ஆகிய நகரங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பயணிகள் யாரும் ஏறி பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.












Click it and Unblock the Notifications