புதுவை காங். பிரமுகர் கொலை- 6 பேர் கைது!
புதுவை: புதுவை காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை திருபுவனை அருகே டி.ஆண்டிப் பாளையத்தை சேர்ந்தவர் பாலையா (52). காங்கிரஸ் பிரமுகர். இவர் நேற்று முன்தினம் இரவு சோரப்பட்டில் இருந்து டி.ஆண்டிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஆண்டிப்பாளையம் குளக்கரை அருகே வந்த போது ஆலமரத்தின் கீழ் பதுங்கி இருந்த ஒரு கும்பல் பாலையாவை வழி மறித்து வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
சம்பவ இடத்திலேயே பாலையா இறந்து போனார். இந்த கொலை காரணமாக டி.ஆண்டிப்பாளையம் மற்றும் சோரப்பட்டில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை.
இந்த கொலை தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந் நிலையில் பாலையா கொலைக்குக் காரணமாக கருதப்படும் கண்டமங்கலத்தை சேர்ந்த தமிழ்வாணன் (22), சோரப்பட்டை சேர்ந்த சாத்தராஜ், அபிஷேக பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார்(23), சின்னபாபு சத்திரம் மந்தவெளி தெருவை சேர்ந்த பூபாலன்(22), சுரேஷ் என்ற பாலமுருகன்(23), பூஞ்சோலைக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி பாலன்(26) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications