புறநானூற்றுத் தாய்களே புறப்படுவீர்!: கருணாநிதி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரு நாள் நமக்கு திருநாள்!. பொங்கல் நாளை பூரிப்பு பொங்கிட தமிழர் திருநாள் என்று குறிப்பிடுகிறோம். தேனும், திராட்சையும் கலந்து தெவிட்டாமல் இனிக்கின்ற தெள்ளமுதை அள்ளி அருந்துகிறோம். புள்ளி வைத்துப்போடும் கோலங்களில் புதுப்பானையென்ன; புனல் பாயும் அருவிகளென்ன; புகையும் வத்திகள் பதித்த சித்திரங்கள் என்ன; என்ன என்னவென்று எத்தனையோ உற்சாகப் பெருக்கினை வெளிப்படுத்தி வீடெல்லாம்- வீடுகள் அமைந்த வீதியெல்லாம் ஒளியூட்டி மகிழ்கிறோம்.
ஒருநாள் பொங்கலுக்கு; அது தமிழர் திருநாள் என்பதற்காக இத்தனை மகிழ்ச்சி! அத்தனை பூரிப்பு!.
தன்மானக் குன்றம்:
இதோ, அந்தத் தமிழர் திருநாளை நம் நினைவில் பதித்து, நெஞ்சில் செதுக்கிய, நிகரில்லாத் தமிழர் கோமான் யார் என்ற கேள்விக்கு ஒரே விடையாக விளங்குகின்ற வித்தகர், தன்மானக் குன்றம், தரணி வாழ் தமிழர்க்கெல்லாம் பெருமன்றம், தகைமைக்கு இலக்கணமாய், பகைமைக்கும் பரிவு காட்டும் நற்குணச் செல்வமாய்த் திகழும் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டினை அவர் பிறந்தநாள் முதல் இந்நாள் வரையில் தமிழ் கூறும் நல்லுலகில் நமது கழகத்தின் வேர் பதிந்துள்ள மண்- கிளைகளின் நிழல் படிந்துள்ள கூரைகள் அனைத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நமக்குரிய இருவண்ணக்கொடிகளை ஊன்றியும்,
ஊரெல்லாம் பறக்கவிட்டும், அவர் பிறந்த நாளின் சிறப்பையும் அவர் பிறந்ததால் நாட்டுக்கும், நம் இனத்துக்கும், நம் தாய்த்தமிழுக்கும் ஏற்பட்ட உயர்வையும், அவற்றை விரிவாக எடுத்துரைத்து வினை முடித்திட நமக்குள்ள பொறுப்பையும் எடுத்தியம்பியும் தொகுத்து விளக்கியும் உள்ளோம்.
விழா அல்ல; மாநாடு..:
பிறந்த நாள் நூறாவது ஆண்டு நிறைவாக காஞ்சீபுரத்தில் மாபெரும் விழா மட்டுமல்ல; அதனை மாநாடு போலவே நடத்துகிறோம்..
நாட்டு வாட்டம் போக்கிடவும், நலிவு தீரவும் எத்தனையோ மாநாடுகளை திட்டமிட்டு நடத்திக்காட்டிய நம் அண்ணனுக்கு நாம் நடத்துகின்ற மாநாடு இது.
அண்ணா 5 ரூபாய் நாணயம்:
அதற்கு முன்பே சென்னை மாநகர், பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் செப்டம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அண்ணாவின் திரு உருவமும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த அவரது கையெழுத்தும் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அந்த விழாவில், அரசின் சார்பாக அரியதொரு கருத்துக்கருவூலமாக, அண்ணா நூற்றாண்டு விழா மலரும் வெளியிடப்படவுள்ளது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அண்ணாவை பற்றிய இன்னிசை பாடல்கள், அண்ணாவின் அழகிய ஆங்கில உரைகளும், தமிழ் உரைகளும் அடங்கிய இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் மற்றும் அகர முதலி நூல்களை வெளியிடுகிறார்.
கவியரங்கம்:
திமுக சார்பில் செப்டம்பர் 26ம் தேதி காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் நடத்தப்படும் விழாவில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் அண்ணாவை பற்றிய கவியரங்கம் நடைபெறவுள்ளது.
அந்த கவியரங்கில், 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற தலைப்பில் காவிய கவிஞர் வாலியும், 'நீதி தேவன் மயக்கம்' என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்தும், 'ஆரிய மாயை' என்ற தலைப்பில் கவிச்சுடர் கவிதைப்பித்தனும், 'அண்ணாவின் உயில்' என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினியும், 'சாமானியர்களின் சகாப்தம்' என்ற தலைப்பில் கவிஞர் விவேகாவும், 'வெள்ளை மாளிகையில்' என்ற தலைப்பில் கவிஞர் யுகபாரதியும் கவிதை பாடவுள்ளார்கள்.
கருணாநிதிக்கு அண்ணா விருது:
அதுமாத்திரமல்ல, தொழிலாளர்கள்பால் அண்ணா தூய நேசம் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
செப்டம்பர் 26 தேதி மாலையில் காஞ்சீபுரம் நசரத்பேட்டை அண்ணா நகரில் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவும், முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் மாநாடு போலவே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விருதுகள் என்பதால் இந்த ஆண்டு அண்ணா விருதினை எனக்கு வழங்குவதென்று முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.
கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா விருதுகள் வழங்குவதென்று தொடங்கி முதல் ஆண்டு அந்த விருதுகளை வழங்கியபோது முதல் அண்ணா விருதினை பொதுச்செயலாளர் அன்பழகன் தான் பெற்றார்.
முதல் ஆண்டில் அண்ணா விருதினை பேராசிரியர் பெற்று, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா விருதினை நான் பெறவிருக்கிறேன் என்பதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி அல்லவா?.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் பெரியார் விருது கி.வீரமணிக்கும், கலைஞர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது முனைவர் வா.செ.குழந்தைசாமிக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்த விழாக்கள் பற்றிய செய்திகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்து அவற்றில் கலந்துகொள்ள புறப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு நீ இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்.
குறை உனக்குமிருக்குமல்லவா?:
இருந்தாலும், அண்ணாவின் விழாவிற்கு, அண்ணன் நான் அழைக்கவில்லையே என்ற குறை உனக்குமிருக்குமல்லவா? அதற்காகவே இந்த கடிதம்!.
தலைமைக் கழகமும், அரசும் அண்ணாவிற்கு விழா எடுத்த போதும், உனது சொந்த ஊரில் உன்னால் முடிந்த அளவிற்கு அண்ணாவுக்கு விழா எடுப்பாய் என்பதை நான் அறிவேன். அதுதான் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசும். இருந்தாலும் தலைமைக்கழகம் எடுக்கும் இந்த விழாவிற்கு நீ உன் குடும்பத்தோடு புறப்பட தயாராகிடு!
தம்பிகள் நாம் நடத்தும் இந்த விழாக்களுக்கு அண்ணா வந்திருந்து நம்மை வாழ்த்திட வேண்டாமா?. அந்த வாழ்த்தினைப் பெற்றிட வரிப்புலி போல் வந்திடுக தம்பி.
புறநானூற்றுத் தாய்களே புறப்படுவீர்; காஞ்சித் தலைவன் பிறந்த நகருக்கு!
இவ்வாறு கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications