உ.கோ. கிரிக்கெட்-சேப்பாக்கம் மைதான புதுப்பிக்கும் பணி துவக்கம்

வரும் 2011 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, வங்கதேசம், இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள 8 மைதானங்களில் 29 போட்டிகள் விளையாடப்பட இருக்கின்றன.
அவற்றில் 1916ல் கட்டட பணிகள் துவக்கப்பட்ட இந்த மைதானத்தில் 1934ல் முதல் போட்டிகள் நடந்து வரும் சென்னை சேப்பாக்கம் மைதானமும் ஒன்று.
சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த தொன்மையான மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் இரண்டு கட்டமாக நடக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஜபிஎல் சீசன் 3 தொடருக்கு முன்பாக முதல் கட்டப்பணியும், அத்தொடர் முடிந்தவுடன் இரண்டாவது கட்ட பணியும் நடக்கவிருக்கிறது.
முதல் கட்டமாக தற்போது மைதானத்தின் 'ஏ' ஸ்டான்ட் பகுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. இப்பகுதியில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இது முடிந்தவுடன் 'பி' மற்றும் 'சி' ஸ்டான்ட்கள் புது பொலிவுடன் மாற்றப்பட இருக்கிறது. பின்னர் மைதானத்தின் மேற்கூரை உயர்தரத்திலான ரப்பர் ஷிட்களால் மூடப்படும்.
இதையடுத்து உலக கோப்பை தொடருக்கு முன்பாக இங்கு வேறு எந்த சர்வதேச போட்டிகளும் நடக்காது என்றும், இதனால் தான் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய தொடருக்கான அட்டவணையில் சென்னை இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் மோடி:
இந் நிலையில் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தல் இன்று நடந்தது. இதில் மாநில முதல்வர் நரேந்திர மோடி, தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத்தில் ஏற்கனவே தலைவராக இருந்த அமின் பதவியில் இருந்து விலகியதை அடுத்து தேர்தல் நடந்தது.












Click it and Unblock the Notifications