• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்தியில் தமிழுக்கு உரிய இடம் வேண்டும்-கருணாநிதி

By Staff
|

Karunanidhi and Pranab
சென்னை: நாங்கள் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல. ஆனால், அதே நேரத்தில் எங்கள் தமிழ் மொழிக்கு மத்தியிலே உரிய இடம் கிடைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணா உருவம் பொறித்த ரூ. 5 நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

பின்னர் 602 பக்கங்கள் கொண்ட அண்ணா நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு கருணாநிதி பேசியதாவது:

அரசியலில் நாணயம்:

நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், அண்ணாவின் 'நாணயம்' அரசியலிலே எப்படிப்பட்டது?, என்பதை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றுதான் அதற்கு அர்த்தம்.

அண்ணாவின் நாணயம் எத்தகையது என்பதற்கு அவருடைய அரசியல் வரலாற்றில் எத்தனையோ கட்டங்கள் உண்டு, எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அவர் அரசியலிலே கடைப்பிடித்த நாணயத்திற்கு உதாரணம் சொல்லவேண்டுமேயானால், எங்கள் அருமை தந்தை பெரியாரோடு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விலக வேண்டிய சூழ்நிலை உருவானபோது, சிலர் அண்ணாவிற்கு 'அரிய யோசனை' என்று கருதிக்கொண்டு சில யோசனைகளைச் சொன்னதுண்டு.

அது என்ன யோசனை என்றால், "நீங்கள் விலகினால் போதாது, பெரியாருடைய தலைமையிலே உள்ள திராவிடர் கழகத்தையே கைப்பற்ற வேண்டும்'' என்று சொன்னார்கள். அப்போது அண்ணா காட்டிய பெருந்தன்மைதான் ஈடு இணையற்ற அரசியல் நாணயம் ஆகும்.

இரட்டைக் குழல் துப்பாக்கி:

அண்ணா சொன்னார்கள், "நீங்கள் சொல்வதைக் கேட்டால் திராவிடர் கழகத்தாரும், நாம் தொடங்குகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் சண்டை போட்டுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலே இருக்கத் தான் நேரிடும். இப்போது இரண்டு கழகங்களும் தனித்தனியே பணியாற்றும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்குமென்று சொன்னார்.

அதுவும், அவர் தீர்க்கதரிசி தான் என்பதற்கு இன்றைக்கு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கிறது என்பதை நீங்கள் நிதர்சனமாகக் காணுகிறீர்கள். எனவேதான் அண்ணா அன்றைக்குக் காட்டிய அரசியல் நாணயம், வெற்றிகரமாக பலித்து இன்றைக்கு திராவிடர் கழகமும், திமுகவும் பணியாற்றுகின்ற நிலைமையை தமிழகத்திலே காண முடிகிறது.

நம் பிரணாப் முகர்ஜி இந்த விழாவிலே கலந்து கொண்டு அண்ணாவைப் பாராட்டினார். பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். முகர்ஜி எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அறிவாற்றலை, அவருடைய அரசியல் ஆக்கத்தை, ஊக்கத்தை, அவருக்கு அரசியலிலே உள்ள பிடிப்பை நான் நன்றாக அறிவேன்.

'பங்களா கட்சி' தலைவர் பிரணாப்..:

நான் அவரைப் பற்றி அதிகமாகச் சொல்வதால், ஒரு வேளை அவர் நிதித்துறை மந்திரி ஆயிற்றே, நிதி பெறலாம் என்பதற்காகச் சொல்கிறேன் என்று அவரும் கருதிக் கொள்ளக் கூடாது, நீங்களும் கருதிக்கொள்ளக் கூடாது.

1970ம் ஆண்டில், சென்னை அண்ணா நகரில் திமுக மாநில சுயாட்சி மாநாடு நடத்தியது. அப்போது அண்ணா இல்லை. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்றால், தந்தை பெரியார், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் அஜாய் முகர்ஜி, அப்போது 'பங்களா கட்சி' என்ற மாநிலக் கட்சியின் தலைவரான பிரணாப் முகர்ஜி, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தெலுங்கானா தலைவர் வி.பி. ராஜூ, நீருலெப்கவுரி, பஞ்சாப் அகாலி தள செயலாளர் சர்தார் பிரேம் சிங் லால் புரா, பீகார் காமேஸ்வர சிங், புதுவை முதல்வர் பரூக் மரக்காயர், என்று இப்படி சென்னையில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாடு, திமுகவால் - நாவலர் நெடுஞ்செழியன் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடைபெற்ற மாநாடு.

அந்த மாநாட்டில் பிரணாப் முகர்ஜி பேசியது எனக்கு நினைவிலே இருக்கிறது. அவர் பேசுகையில்,

"இருக்கிற அரசியல் அமைப்பிற்குள் மத்திய, மாநில உறவுகளை எப்படி இப்போது வளர்ப்பது என்பதே பிரச்சினை. அரசியல் அமைப்பையும், அதன் நடைமுறையையும் கவனிக்கும் யாரும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பு சில சமஷ்டி அம்சங்களைக் கொண்ட ஒன்றிய ஆட்சியே தவிர, கூட்டாட்சி அல்ல என்பதை அரசியல் அறிஞர்கள் அறிவார்கள். முக்கியமான அதிகாரங்கள் மத்திய அரசிடமும், முக்கியம் அல்லாத அதிகாரங்கள் மட்டும் மாநிலங்களுக்கு தரப்பட்டு அவற்றையும் மத்திய அரசு கண்காணிக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களில் எதையும் எச்சமயத்திலும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளவும் அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம அதிகாரமும் மரியாதையும் அளித்தால்தான் நாட்டில் ஒற்றுமை நிலவ முடியும். ஒவ்வொரு பகுதிக்கும் மொழியினருக்கும் வாய்ப்புகள் தரப்படவேண்டும். அப்போது தான் தேசிய ஒருமைப்பாடு உருவாகும். எனவே திமுகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல, ஆனால்:

இப்போது நான் கேட்கும் இடத்திலும், அவர் கொடுக்கும் இடத்திலும் இருக்கிறார். உடனடியாக இல்லாவிட்டாலும் எல்லா இடையூறுகளையும் கடந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கச் செய்ய பிரணாப் முகர்ஜி முன்வர வேண்டும்.

நாங்கள் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல, ஆனால் அதே நேரத்தில் நாங்கள் எல்லா மொழிக்கும் நண்பர்கள். எல்லா மொழியையும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் மொழிக்கு உரிய இடம் மத்தியிலே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

அதை ஒரு பெங்காளியும் சொல்லலாம், ஒரு தெலுங்கரும் சொல்லலாம், ஒரு மலையாளியும் சொல்லலாம், ஒரு இந்திக்காரரும் சொல்லலாம், இன்னும் சொல்லப் போனால் 1937-38ம் ஆண்டில் நாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த போது நாங்கள் சொன்ன வார்த்தை, இந்தி ஒழிக என்பதல்ல, "கட்டாய இந்தி ஒழிக'' என்பது தான். இந்தி ஒழிக என்று என்றைக்கும் சொன்னது கிடையாது. ஏனென்றால் ஒரு தனிப்பட்ட மொழி மீது எங்களுக்கு எந்த துவேஷமும் கிடையாது.

இந்தி மொழியை திணிக்காதீர்கள்:

தமிழ் வாழ்க- மற்ற எல்லா மொழிகளும் வாழ்க, அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி தமிழை வீழ்த்த, இந்தி மொழியை திணிக்காதீர்கள் என்று தான் அன்றைக்கு நாங்கள் வாதிட்டோம். அந்த வாதம் இன்றைக்கும் இருக்கிறது. ஏனென்றால் அந்த வாதத்திற்கு வலு சேர்த்துக் கொடுக்க அந்த வாதம் வாகை சூட, நாங்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது, நம்முடைய பிரணாப் முகர்ஜி போன்ற அறிவாற்றல் மிக்க நல்ல தலைவர்களைத் தான்.

ஏனென்றால் மொழி பற்றி, மொழி உணர்வு பற்றி, மொழி ஆர்வலர்களைப் பற்றி, மொழியிலே ஏற்படுகின்ற சிக்கல்களை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் அவர் அறியாதவர் அல்ல.

அவர் ஒரு காலத்திலே காங்கிரஸ் இயக்கத்திலே இருந்து இடையிலே சில காரணங்களால் சற்று ஒதுங்கியிருந்து, மீண்டும் இன்றைக்கு காங்கிரஸ் இயக்கத்தின் ஆட்சியை இந்தியாவிலே நிலை நிறுத்துகின்ற வகையில், அதற்காக வாதாடி வெற்றி பெறுகின்ற வகையிலே யார் இந்தியாவினுடைய ஆட்சியை முன் நின்று நடத்த வேண்டுமென்றால் அதற்குத் தகுதியானவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி என்று சொல்லுகின்ற அளவிற்கு டெல்லி பட்டணத்திலே பேசப்பட்ட அந்த வார்த்தைகளையெல்லாம் நான் நன்றாக நினைவிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் கருணாநிதி.

அண்ணா வழியில்..:

முன்னதாக வானொலி, தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,

அண்ணா காட்டிய வழியில் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களை நிலைநாட்டி வருகிறோம்.

கடந்த 1949ம் ஆண்டு தந்தை பெரியாறுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக, சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில், கொட்டும் மழையில் திமுகவை தொடங்கினார் அறிஞர் அண்ணா.

1956ம் ஆண்டு மாநாட்டில், ஓட்டெடுப்பு நடத்தி திமுக தேர்தல்களில் பங்குபெறும் முடிவை அறிவித்தார். 1957ல் திமுக முதல் முறையாகப் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வென்று சட்டசபையில் இடம்பெற்றது.

சட்டசபையில் அடக்கத்துடன் உரையாற்றுபவர் அண்ணா. பின்னாளில் சட்டசபையிலும், ராஜ்யசபாவிலும், பொது மேடைகளிலும் அவர் கடைபிடித்த ஜனநாயக நெறிகள், அவரை 'ஜனநாயக சிற்பி' எனும் நிலைக்கு உயர்த்தின.

எதிர்க்கட்சித் தலைவர்களை மதிப்பவர் அண்ணா. சென்னை மாநகராட்சி சார்பில், அண்ணாவுக்கு சிலை வடித்து, அதை நிறுவ அனுமதி கேட்டனர். அதை மறுத்த அண்ணா, "சிலை வைப்பதென்றால் காமராஜருக்கு வையுங்கள்' என்றார்.

அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாசாலையில், காமராஜருக்கு சிலை வைக்கப்பட்டு அன்றைய பிரதமர் நேரு அதைத் திறந்து வைத்தார்.

சென்னை ராஜ்யம் என இருந்ததை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றியவர் அண்ணா. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட பாதுகாப்பு தந்தவர்.

1969ம் ஆண்டு தமிழ்ச் சமூகத்தை துயர்க் கடலில் ஆழ்த்திவிட்டுச் சென்ற அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது வழியில் திமுகவையும், ஆட்சியையும் வலிவுடன் வளர்த்துள்ளோம்.

அண்ணா கடைபிடித்த அதே ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி தமிழகத்தை, நாட்டின் முன்னணி மாநிலமாக உயர்த்தி உள்ளோம்.

இந்த முன்னேற்றங்கள் தொடர அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X