For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி 5 நாட்களில் 20,000 தமிழர்கள் படுகொலை-தமிழ்ப் பெண் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

Tamilvani
லண்டன் வன்னிப் போரின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று சம்பவத்தின்போது அங்கு இருந்து தற்போது லண்டன் மீண்டுள்ள தமிழ்ப் பெண் தமிழ்வாணி ஞானக்குமார் என்பவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தமிழ்வாணி ஞானக்குமார். இவரும், இவரது குடும்பத்தினரும் கடந்த 1994-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தனர். இவர் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் படிப்பு படித்துள்ளார்.

திருமண வாழ்க்கை கசந்ததால் லண்டனிலிருந்து புறப்பட்டு கொழும்பு வந்த தமிழ்வாணி பின்னர் வன்னிக்குச் சென்றார்.

அந்த சமயத்தில் அங்கு புலிகளுக்கும், இலங்கைப் படைகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்திருந்த நேரம். அப்பாவித் தமிழர்கள் பலர் படுகாயமடைந்து தவித்ததை நேரில் பார்த்த தமிழ்வாணி அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தார்.

இலங்கை ராணுவம் தொடர்ந்து முன்னேறி வந்ததால், சுமார் 3 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அங்கிருந்த தமிழ் வாணி காயமடைந்த மக்களுக்கு உதவி செய்ய மருத்துவமனைக்குச் சென்றார். அங்கும் குண்டு வீசப்பட்டது. இதில் 50 பேர் பலியாயினர்.

கடைசியாக நடந்த தாக்குதலின்போது லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். 4 மாதங்கள் கழித்து சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது லண்டன் திரும்பி விட்ட தமிழ்வாணி, கார்டியன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். கடைசி நாட்களில் நடந்தவை குறித்து அவர் உருக்கத்துடன் விவரித்துள்ளார்.

கார்டியன் செய்தியிலிருந்து சில பகுதிகள்...

தன் குழந்தையை இறுக்க அணைத்தபடி ஒரு இளம் தாய் வீதியோரமாக நின்றுகொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

அந்தத் தாய் ஒரு முடிவு எடுப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தமிழ்வாணி ஞானகுமார் பார்த்தார். அவர்களைச் சுற்றிலும், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் மனித உடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

வீதி ஓரமாக ஒரு தாய் தனது குழந்தையை இறுகப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். குழந்தை இறந்து போயிருந்தது. அந்தக் குழுந்தையை தாயால் எடுத்துவர முடியாது. அதை அப்படியே விட்டுவிட்டு வரவும் அந்தத் தாய் விரும்பவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

லட்சக்கணக்கான மக்கள் விரைவாக வெளியேறியபடியும் ஒவ்வொருவரையும் வெளியேற்றியபடியும் இருந்த அந்த நிலையில், இறுதியில், வீதியோரமாக அந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு அவளும் வெளியேறிச் சென்றாள். அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. அவளுக்கு வேறு வழி எதுவும் இல்லை.

"அப்போது நான் சிந்தித்தேன், இந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களைச் சுமக்கிறார்கள்? அனைத்துலக சமூகம் ஏன் அவர்களுக்காகப் பேச மறுக்கிறது? நான் இப்போதும் அந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்."

இலங்கையின் வடக்கு-கிழக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் இருந்த மருத்துவமனைகளில் இருந்து தமிழ்வாணி கடைசியாக வெளி உலகுடன் பேசி இருந்தார்.

இறுதியில் விடுதலைப் புலிகளை ஒடுங்கிய நிலப் பிரதேசத்திற்குள் நெருக்கிச் சென்ற அரச படையினர், லட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாகப் பிடித்துச் சென்றனர். அந்தப் பேரவலத்திற்குள் தமிழ்வாணி இருந்துள்ளார். எறிகணைக் குண்டு மருத்துவமனை மீது வீழ்ந்து வெடித்து பலரைப் பலிவாங்கியது. "அந்தத் தருணம் நரகம் போன்றது" என்கிறார் தமிழ்வாணி.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் போர் நடைபெறும் இடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி அங்கிருந்து அவர் வெளி உலகிற்குத் தகவல்களையும் சொல்லி வந்த, அங்கிருந்த சிறிய மருத்துவக் குழுவில் ஒருவராக தமிழ்வாணி இருந்துள்ளார்.

அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துகொண்டிருந்தபோது தனது உயிரை இழக்காமல் தமிழ்வாணி ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார்.

மண்ணிற்குள் தோண்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் இரவுகளில் காலத்தைக் கழித்துள்ளார். பகல் பொழுதுகளில், இடம் மாறிக் கொண்டிருந்த மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கசாப்புக் கடைக்காரனின் கத்தியைக் கொண்டும் தண்ணீர் கலக்கப்பட்ட மயக்க மருந்தைக் கொண்டு மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில், வீழும் எறிகணைகளாலும் குண்டுகளாலும் அங்கு பலர் காயமடைந்தும் இறந்தும் கொண்டிருந்தனர்.

ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து இப்போது அவர் தெரிவிக்கும் தகவல்கள், பொதுமக்களின் ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்திருப்பதற்கு எதிரான வலுவான ஆதாரங்களாக இருக்கின்றன.

தமிழ்வாணி 1984 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவரும் அவரது குடும்பத்தினரும் 1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் வரைக்கும் அவர் அங்கு திரும்பிச் சென்றிருக்கவில்லை. கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பட்டப் படிப்பை அவர் முடித்திருக்கிறார்.

ஆனாலும், அவரது திருமண வாழ்க்கை இயல்பானதாக அமையவில்லை. அதனால் அதனை முறித்து விடுவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் தீர்மானித்தார். தான் எங்கு செல்கிறேன் என்ற விபரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

கொழும்பை வந்தடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது உறவினர்களுடன் வசிப்பதற்காக வன்னிக்குச் சென்றார். அவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் லண்டனில் இருக்கிறார்கள்.

வன்னியில் ஆபத்துக்கான சில அறிகுறிகள் தெரிந்தன. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜூலையில்தான் சண்டைகள் மிக மோசமாகின. அரசுடன் பேச்சுக்களை நடத்தலாம் என புலிகள் தொடர்ந்து எண்ணி வந்தனர். அதைத்தான் அவர்கள் கடந்த காலங்களிலும் செய்தனர். ஆனால், புலிகளை அடியோடு அழித்துவிடுவது என்ற திட்டத்தை அரசு கொண்டிருந்தது.

இந்தச் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அங்கேயே தங்கி இருப்பது என தமிழ்வாணி தீர்மானித்தார்.

அரசின் தரைப் படையினர் அவர்களை எட்டுவதற்கு முன்னர் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான வானூர்தி குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் கனரக எறிகனைகளில் ஆக்ரோசமான தாக்குதல்கள் தொடங்கின. அது மக்களை தமது இடங்களைவிட்டு நகரும்படி நிர்ப்பந்தித்தது.

"மழை பெய்துகொண்டிருந்தது. அத்துடன்........ வீதி முழுவதும் தண்ணீருடன் சேர்ந்து இரத்தமும் உடலங்களும் ஆறாய் ஓடியதைப் பார்க்க முடிந்தது. அந்த உடலங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருந்தன. யார் இறந்தார்கள் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை யாராலும் அடையாளப்படுத்த முடியவில்லை.

உடலங்கள் அத்தனையும் தரையில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் தடவையாக நான் உடலங்களையும் அழுதுகொண்டும் கத்திக்கொண்டும் இருந்த காயப்பட்ட மக்களையும் நான் பார்த்தேன்."

மக்கள் எங்கு நிற்கிறார்களோ அங்கே உடனடியாக ஒரு பதுங்கு குழிகளை உருவாக்கினார்கள். குறைந்தபட்சம் ஒரு மனிதன் நின்றுகொண்டிருக்கக் கூடியளவு மண்ணில் துளை தோண்டிக்கொண்டார்கள். பனை மரங்களை வெட்டி அந்தக் குழிகளின் மேலே அடுக்கினார்கள். அதற்கு மேலேயும் அருகிலேயும் மண் மூட்டைகளை அடுக்கினார்கள்.

ராணுவம் முன்னேறத் தொடங்கியதும் சுமார் 3 லட்சம் மக்களும் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. தமிழ்வாணி அங்கிருந்த மருத்துவமனைக்கு உதவிகள் புரிவதற்காகச் சென்றார். முன்னாள் ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு அது இடம்மாறி இருந்தது. முதலுதவிகளை வழங்குவது மற்றும் காயங்களுக்குக் கட்டுப்போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது அவரது நோக்கமாக இருந்தது.

தமிழ்வாணியின் பட்டப் படிப்பு இதற்கான எதனையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. நேரடியாக அவற்றைச் செய்வதன் மூலமே அவர் அவற்றைக் கற்றுக்கொண்டார். சண்டை கடுமையானதும், அந்த இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட தற்காலிக மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

"அவர்களுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் எப்படியோ அவர்கள் சில உயிர்களைக் காப்பாற்றினார்கள். கடைசி இரண்டு வாரங்களும் அதற்கு மேலும் எல்லாவற்றிற்குமே பற்றாக்குறை இருந்தது."

ஏற்றிய ரத்தமும் சேர்ந்து வெளியேறிக் கொண்டிருக்க, நோயாளியிடம் இருந்து என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு காயத்திற்குக் கட்டுப்போட வேண்டிய நிலையில் அவர் இருந்துள்ளார். அவர்களின் நரம்புகளில் திரும்பவும் ரத்தம் ஏற்றுவதற்கு முன்னர் அவர் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. மயக்க மருந்து பற்றாக்குறையாகிக் கொண்டிருந்த நிலையில் அதனுடன் சுட வைத்து ஆறிய தண்ணீரைக் கலந்து கொடுத்தார்கள்.

"ஆறு வயதுச் சிறுவனுக்கு சிகிச்சை செய்யும்போது நான் பார்த்தேன். அவர்கள் அவனது ஒரு காலையும் கையையும் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்களிடம் அதற்கான சரியான உபகரணங்கள் இருக்கவில்லை. இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படும் கத்தி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, அந்தச் சிறுவன் கதறக் கதற அவனது காலையும் கையையும் வெட்டி எடுத்தார்கள்.

படையினர் நெருங்கி வந்தபோது நிலைமை இன்னும் மோசமானது.

"எறிகணைக் குண்டுகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லோருமே இறந்துவிடப் போகின்றோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

தொடர்ந்தும் அங்கு உயிருடன் இருப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கிவில்லை. நான் இங்கே இப்போது உயிருடன் இருப்பேன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் சொல்லிக் கொண்டேன், சரி, நான் சாகப்போகிறேன், இதுதான் இறுதி முடிவு என்று.

"ஒரு நாள் நான் அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குள் இருந்தேன். அடுத்த அறை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த அறையில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுவீச்சில் இறந்துபோனார்கள். அவர்கள் (ராணுவத்தினர்) மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை மருத்துவமனை மீது நடத்தினார்கள். இதில் ஒரு மருத்துவர் இறந்து போனார்."

அந்த மருத்துவமனையில் ஓய்வு ஒழிச்சலே இருக்கவில்லை. தனது குழந்தையை அணைத்தபடி காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட ஒரு தாயை தமிழ்வாணியால் என்றுமே மறக்கமுடியாது.

"தனது குழந்தையை அவர் மடியில் வைத்திருந்தார். அந்தக் குழந்தை இறந்திருந்தது. ஆனால் அந்தத் தாய்க்கு அது தெரியாது. குழந்தை இறந்தது பற்றி இப்போது அவரிடம் சொல்ல வேண்டாம், ஏனெனில் விஷயம் தெரிந்தால் தாய் அழுது, கூப்பாடு போடுவார் அத்துடன்.... நாங்கள் அந்தத் தாயை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

அதனால் நாங்கள் அந்தத் தாயிடம் கூறினோம், சரி நீங்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் தாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று. சிகிச்சை முடிந்த பின்னரே அவரிடம் நாங்கள் குழந்தை இறந்துபோய் விட்டது என்ற உண்மையைச் சொன்னோம். என்னால் இப்போது இலகுவாகச் சொல்லிவிட முடிகின்றது. ஆனால், அந்தத் தருணத்தில் நான் பெரும் வேதனையை அனுபவித்தேன். அது ஒரு அப்பாவிக் குழந்தை. அது இறந்தது கூடத் தெரியாத தாய். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்."

"இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு சமயம் தாய் இறந்து போயிருந்தார். அது தெரியாமலேயே அவரது குழந்தை அவர் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது."

சண்டை இன்னும் இன்னும் நெருக்கமாக வந்தபோது, கைகளில் என்ன கிடைத்ததோ அவற்றையே அவர்கள் உண்டார்கள். தூங்க முடிந்தவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கினார்கள்.

"எப்போதும் ஓடுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருந்து தூங்குவதற்குச் செல்ல முடியாது. எந்த நிமிடத்திலும் அந்த இடத்தைவிட்டு அகல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்."

மே மாதம் 13 ஆம் நாள் மருத்துவமனை குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அங்கிருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்வாணிக்கு அங்கு வேலை இருக்கவில்லை.

"எங்களுடைய பதுங்குகுழிக்கு அடுத்ததாக இருந்த குழியின் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.

"நான் அவர்களைப் பார்த்தேன்.......... திடீரென மக்கள் கதறி அழும் சத்தம் கேட்டது. நான் நினைத்தேன் இது எங்கோ எமக்கு மிக அருகில் என்று. ஆனால் நான் அந்த இடத்தை கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அந்த இடம் முழுவதும் ரத்தக் கறையாகக் கிடந்தது. உடலங்கள் எல்லா இடங்களிலும் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தன. என்னுடைய சகோதரன் சொன்னான், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு நாங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும் என்று."

கடைசி ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என தமிழ்வாணி கூறுகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உண்மையான, சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

ஆனால், சாட்சிகளிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்ட கணக்குகளின்படி தமிழ்வாணி கூறுவது சரியானதுதான் எனத் தெரிவிக்கிறது உலகத் தமிழர் பேரவை.

கடைசி குண்டுத் தாக்குதல்களின் பின்னர், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் வந்திருந்தார். அவர் உடனடியாக அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார்.

"நாங்கள் நகர்வதற்கு தொடங்கினோம். சுமார் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நடந்ததன் பின்னர் சிறிலங்காப் படையினரை நாங்கள் கண்டோம். வாருங்கள், நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். எங்கும் உடலங்கள் சிதறிக் கிடந்தன. துண்டு துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தன. அவற்றுக்கு நடுவே நாங்கள் நடந்து வந்தோம். அங்கேதான் தனது இறந்துபோன குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்ற தாயை தமிழ்வாணி கண்டார்.

உடலங்களை அடக்கம் செய்வதற்கு எவருக்கும் நேரம் இருக்கவில்லை. சிலர் அவற்றை பதுங்கு குழிகளுக்குள் தள்ளிவிட்டு அதன் மேல் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு மறைத்தார்கள். அதுதான் அவர்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்த விஷயமாக அப்போது இருந்தது.

அந்த இரவு அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தூங்கினார்கள். அதன் பின்னர் பேருந்துகளில் வவுனியா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கிருந்து அவரது தாயாருடன் பேசினார். "என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள் அம்மா என்று நான் சொன்னேன். அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றிருந்தது எனக்கு. அத்துடன் என் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது."

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழ்வாணி வந்த முதல் நாளில் எந்த உணவும் அவர்களுக்குக் கிடையாது. அத்துடன் அவருடன் இருந்தவர்களின் தொடர்புகளையும் அவர் இழந்துவிட்டிருந்தார். மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் அவர் உறங்கினார்.

போர்ப் பகுதிகளைவிட்டு பிரிந்து முகாம்களுக்கு வந்தால் அதன் நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

"நீங்கள் எங்கே போனாலும் அங்கு பெரியதொரு வரிசை நின்று கொண்டிருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் வரிசையில் நின்றாக வேண்டும். அது எவ்வளவு அருவருப்பாக இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. மக்களுக்கு எல்லா வகையான வருத்தங்களும் வந்தன.

"மக்கள் தமது சொந்தங்களை இழந்தனர்...... பலர் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்துச் செல்லப்பட்டனர்...... அத்துடன் மக்கள் மிகச் சோர்வடைந்தார்கள்."

கொலைகளும் பாலியல் வன்புணர்ச்சிகளும் அங்கு நிகழத் தொடங்கின. மக்கள் காணாமல் போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு ஆசிரியை மரத்தில் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார்.

படைத்துறை புலனாய்வாளர்கள் முகாம்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முன்னாள் போராளிகளைக் கண்டறிவதற்காக.

"அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம். ஆனால் சிறைகளுக்கு உள்ளேயே நீங்கள் இருக்கிறீர்கள். அதை விட்டு வெளியே செல்ல நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களால் முடியாது. காவலர்கள் எல்லா இடங்களிலும் நின்றிருப்பார்கள். அத்துடன் சோதனை நிலையங்களும் இருக்கும்."

தமிழ்வாணி முகாமுக்கு வந்து சில நாட்கள் கழித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகம் மூலமாக இங்கிலாந்து தூதரகம் அவரைத் தொடர்பு கொண்டது. அவரது பெற்றோரும் 'த கார்டியன்' நாளேடும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து இது நிகழ்ந்தது.

அதன் பின்னர் அவர் மேனிக் முகாமின் இரண்டாம் வட்டாரத்தில் இருந்து முதலாம் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டார். இந்தப் பகுதியே வெளியிருந்து வருகை தருபவர்களுக்கு அரசால் காண்பிக்கப்படும் பகுதி.

10 நிமிடமே இருந்த பான் கி மூன்...

"ஐக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பான் கீ மூன் அங்கு வரும்போது நான் அங்கே இருந்தேன். அவர் அங்கே ஒரு 10 நிமிடங்கள்தான் இருந்திருப்பார். உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டார். முகாமுக்குள் அவர் ஏன் செல்லவில்லை? ஏன் மக்களைச் சந்தித்து கொஞ்ச நேரத்தைச் செலவிட்டு அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று கேட்கவில்லை? நான் நினைக்கிறேன் அவருக்கு அந்தப் பொறுப்பு இருந்தது என்று. அத்துடன், மக்களும் அவரிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்த்தார்கள். அவர்கள் அவரிடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார். அவ்வளவுதான்."

தமிழ்வாணி சில நாட்கள் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். "அதன் பின்னர் 48 மணிநேரம் மூன்று நாட்களாக மாறியது. பின்னர் வாரங்களாக மாதங்களாக அது மாறியது. அப்போது நான் நினைத்தேன், சரி இனி இது நடக்கப் போவதில்லை என்று." அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றியும் மருத்துவமனையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றியும் ஐந்து தடவை அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த வாரத்தில் அவரை அழைத்த அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் செல்லாம் எனத் தெரிவித்திருந்தனர். அரச தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"நீங்கள் விடுதலை செய்யப்படுகிறீர்கள், உங்களது குடும்பத்துடன் இணைந்து கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார் பசில் ராஜபக்சே." அதன் பின்னர் தமிழ்வாணி இங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் ஒப்படக்கப்பட்டார்.

"மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். நான் இங்கிலாந்தில் இருக்கின்றேன் என்பது உண்மையல்ல என்று இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்....... நான் உயிருடன் இருப்பேன் என்றோ இங்கிலாந்துக்குத் திரும்பி வருவேன் என்றோ நான் எண்ணி இருக்கவே இல்லை. முகாமில் இருக்கும்போது கூட அப்படி எண்ணவில்லை என்கிறார் தமிழ்வாணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X