நீதிபதி தினகரன் மீது பொய் புகார்: சென்னை, மதுரையில் தி.க. போராட்டம்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரன் மீது பொய் புகார் கூறி அவரது வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்யும் சக்திகளை எதிர்த்து வரும் 25ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் திராவிட கழத்தினர் போராட்டம் நடத்துவார்கள் என அக்கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தற்போது கர்நாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் தினகரனை, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
அவர் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை வகுப்பினர் என்பதால் சிலர் அவரது வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.
அவர் பரம்பரையாக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அதே நேரத்தில் அவர் நீதிபதி ஆன பின்னர் எந்த சொத்தும் வாங்கவில்லை. ஆனால், தேவையில்லாமல் அவர் அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக புகார் செய்துள்ளனர்.
அவர் தனது சொத்து விபரம் குறித்து ஏற்கனவே மூத்த நீதிபதிகள் குழுவிடம் விளக்கமாக தெரிவித்துவிட்டார்.
உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர்...
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அதனால் அவர் தினகரனுக்கு ஆதரவாக பேசுகிறார் என தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் உள்நோக்கம் இருக்கிறது.
பொய் புகார்களை அள்ளிவிடும் இந்த சக்திகளை கண்டித்து வரும் 25ம் தேதி சென்னையிலும், மதுரையிலும் திராவிடர் கழகம் மற்றும் சமூக நீதி ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த போராட்டம் சென்னையில் எனது தலைமையிலும், மதுரையில் திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வக்கீல் மகேந்திரன் தலைமையிலும் நடைபெறுகிறது.
இது நீதிபதி தினகரன் என்ற தனி மனிதருக்காக நடத்தப்படும் அறப்போர் அல்ல. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமையை நிலைநாட்டும் கடமை என்றார்.












Click it and Unblock the Notifications