கேரள அணை ஆய்வு - மத்திய அரசு முறைப்படியான அனுமதிக் கடிதம் தரவில்லை - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலான புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் ஆய்வுக்கு மத்திய அரசு முறைப்படி அனுமதிக் கடிதம் தரவில்லை. இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணையைக் கட்ட படு வேகமாக உள்ளது. சமீபத்தில் புதிய அணை கட்ட கேரளா திட்டமிட்டுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழர்கள் இந்த விஷயத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி: முல்லைப் பெரியாறு பிரச்சினையில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை முறியடிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக பழ.நெடுமாறன் சொல்லியிருக்கிறாரே?.

பதில்: இந்தப் பிரச்சினைக்கான பதிலை 2 நாட்களுக்கு முன்பு நான் சொல்லியிருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு அதுபோல கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதி கொடுத்திருப்பதாக அதிகார பூர்வமாக இதுவரை எந்தவிதமான கடிதமும் கிடையாது.

கேரள நீர்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியதாக பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியில் "முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்காக புலிகள் சரணாலயத்தில் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கான கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் ஆய்வு தொடங்கும்'' என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே செய்தியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில் "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 3 கி.மீ. சுற்றளவில் ஆய்வு நடத்த மட்டுமே கேரளாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை புதிய அணை கட்டுவதற்கான அனுமதியாக கருத வேண்டியதில்லை'' என்று சொல்லியிருக்கிறார்.

உண்மையில் இது குறித்த பிரச்சினை உச்சநீதி மன்றத்திலே நிலுவையிலே உள்ளது. அங்கே ஒரு முடிவு தெரியும் வரையில் இதுபோன்று வெளிவரும் செய்திகளைக் கொண்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. எனினும் மத்திய அரசிடமும் இந்தப் பிரச்சினை குறித்து தமிழக அரசின் சார்பில் நமது எதிர்ப்பினை தெரிவிப்போம்.

கேள்வி: இலங்கைப் பிரச்சனை குறித்து தாங்கள் எழுதிய கடிதத்தையொட்டி மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?

பதில்: பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளதோடு நிறுத்திக் கொள்ளாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து நமது கோரிக்கையை விளக்கவும் உள்ளார்கள்.

மத்திய, மாநில அரசுகள் இந்த அளவிற்கு இலங்கை தமிழர் பிரச்சனையிலே செயல்பட்டு வந்த போதிலும், இங்கேயுள்ள ஒரு சிலர் திரும்பத் திரும்ப மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று அதிமுக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவிப்பு கொடுத்திருக்கிறாரே?.

பதில்: இன்றையதினம் அவருக்கு அறிக்கை வெளியிட வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லைபோலும்!. மேலும் இந்த ஆட்சியில் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வருகின்ற 30ம் தேதி திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இது ஜெயலலிதாவிற்கு பொறுக்குமா?, இதனால் உடனடியாக திருவாரூரில் போராட்டம் என்று அறிக்கை விட்டுவிட்டார்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் இதுபோலவே முறை வைத்துத்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பதை மறந்துவிட்டு அறிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் நானும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக்கொள்ள ஜெயலலிதா கொடைநாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு, கட்சிக்காரர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி: உதிரி பாகங்கள் இன்றி அரசு விரைவுக் கழகப் பேருந்துகள் முடங்கிக் கிடப்பதாக செய்தி வந்துள்ளதே?.

பதில்: அதுபற்றி விரிவாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் 56 பேருந்துகள் உதிரி பாகங்கள் இல்லாததால் முடங்கிக் கிடப்பதாக கூறப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகள் மொத்தம் ஆயிரம் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் 56 பேருந்துகள் முடங்கிக் கிடப்பதாக அவர்களே கூறுகிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இதுவரை 9,248 புதிய பேருந்துகளை வாங்கி இயக்கி வருகின்றன. வரும் நிதியாண்டில் மட்டும் மேலும் 3,500 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+