துணை முதல்வர்- செஞ்சுரி போட்ட ஸ்டாலின்!
சென்னை: படிப்படியாக ஒவ்வொரு பதவியாக உயர்ந்து இன்று துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் அப்பதவியில் 100 நாட்களைக் கடந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை கொஞ்சம் கடுமையானதே.
கருணாநிதியின் மகன் என்பதற்காக அவரைத் தேடி பெரிய பெரிய பதவிகள் லட்டு மாதிரி வந்து உட்கார்ந்து விடவில்லை. முதல்வர் கருணாநிதியே கூட ஸ்டாலினை ஒவ்வொரு பொறுப்பிலும் அமர வைப்பதற்கு முன் ஏகப்பட்ட டெஸ்டுகளை வைத்துத்தான், கொடுத்துள்ளார்.
எப்போதோ முதல்வர் பதவிக்கு வந்திருக்க வேண்டும் என்று திமுகவினர் மத்தியி்ல் ஸ்டாலின் குறித்த ஆதங்கம் இருந்தபோதிலும் கூட, அந்தப் பதவியில் சட்டென உட்கார்ந்து விட முடியாது. போதிய அனுபவம் தேவை என்பதால்தான் இத்தனை காலமாக பல்வேறு அனுபவப் பதவிகளில் ஸ்டாலினை அமர்த்தி வந்து இப்போதுதான் துணை முதல்வர் என்ற பொறுப்பை அளித்துள்ளார் கருணாநிதி.
கோபாலபுரத்தில் ஒரு நண்பரின் முடி திருத்தும் கடையில் வைத்து திமுக இளைஞர் அணியை உருவாக்கியது, அதன் செயலாளரானது, சென்னை மேயர், பின்னர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், அமைச்சர் என ஸ்டாலினை படிப்படியாக புடம் போட்டு, தனது நேரடி மேற்பார்வையில் அரசு நிர்வாகம், கட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஸ்டாலினை அனுபவத்திற்குள்ளாக்கி தற்போது அவரை துணை முதல்வராக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
அந்தப் பதவியில் 100 நாட்களை கடந்துள்ளார் ஸ்டாலின்.
சிறந்த நிர்வாகியாக அரசு மட்டத்திலும், சிறந்த கட்சித் தலைவராக கட்சியினர் மத்தியிலும், மூத்த தலைவர்களின் அபிமானத்தையும் கூடவே பெற்று முழுமையான ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார் ஸ்டாலின்.
அவருடைய நிர்வாகத் திறமை கடந்த காலங்களில் நிறையவே மேம்பட்டுள்ளது. துணை முதல்வரான பின்னர் வாரந்தோறும் ஒரு துறையின் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் அதிக அக்கறை காட்டும் ஸ்டாலினின் பணிவும், அதிகாரிகளை மதிப்பதும் நிறையவே பேசப்படுகிறது.
அரசுப் பணிகளோடு அவ்வப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கட்சியினரை சந்திப்பதோடு கூட்டங்களில் பேசுவதும், மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதுமாக இருக்கிறார் ஸ்டாலின்.
இத்தனைப் பணிகளையும் ஆர்ப்பாட்டம், படோடபம் இல்லாமல் மிக அமைதியாக செய்வது தான் சிறப்பு.
சட்டசபைக் கூட்டத் தொடரின்போது தேவையில்லாமல் மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடாமல், எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள், புகார்களை காது கொடுத்துக் கேட்டு அவற்றுக்கு உரிய பதில்களையும், விளக்கங்களையும் ஆதாரப்பூர்வமாக வைத்து தனது நிதானத்தை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.
லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலின்போது மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருணாநிதி வராத குறையை நிவர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், திமுக கூட்டணியின் பிரமாண்ட வெற்றிக்கும் அடிகோலினார்.
லோக்சபா தேர்தலின்போது அவர் மேற்கொண்ட பிரசார உத்திக்கு நல்ல பலனும், வரவேற்பும் கிடைத்தது.
இயற்கையாகவே ஆர்ப்பாட்டமான அரசியலில் ஈடுபடாதவர் ஸ்டாலின். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவரது ஸ்டைல். பேசுவதைக் காட்டிலும் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார். கட்சியின் இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஸ்டாலின், மூத்த தலைவர்களின் அன்பையும், மதிப்பையும் ஒரு சேர வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்சிப் பொருளாளராக உயர்த்தப்பட்டது முதல் கட்சிக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் இடையிலான பாலம் போல மாறினார் ஸ்டாலின்.
தினசரி அவரை சந்திக்க கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரும் திரளாக வருகின்றனர். முடிந்தவரை அனைவரையும் எப்படியாவது சந்தித்து விடுகிறார் ஸ்டாலின்.
அது மட்டுமல்லாமல் தனது பெயரில் ஒரு பிளாக் ஆரம்பித்து அதன் மூலமும் மக்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி வைத்துள்ளார் ஸ்டாலின்.
தமிழக அளவில் ஒரு அரசியல் தலைவரின் பிளாக் படு பிசியாக இருப்பதும், மக்களுக்கு தோழமையான முறையில் செயல்படுவதும் ஸ்டாலினுடையது மட்டுமே.
அதில் மக்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும், புகார்களையும் புறக்கணிக்காமல் பரிசீலித்து உரிய நடவடிக்கையும் எடுக்கிறார்.
ஸ்டாலினுடைய 100 நாட்கள் மசாலா பட 100 நாள் போல் அல்லாமல், சாதனைகளையும், பெருமைகளையும் உள்ளடக்கியுள்ளது என்பது உண்மை.












Click it and Unblock the Notifications