மதுரை மாநகராட்சி அதிகாரியை கடத்தி ரூ. 15 லட்சம் பறிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சமீபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மதுரை மாநகராட்சி அதிகாரியைக் கடத்திய ஐந்து பேர் கும்பல் அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் பணத்தை பறித்துள்ள செயல் அம்பலமாகியுள்ளது. கடத்திய கும்பலைச் சேர்ந்த ஐவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் முதன்மை நகரமைப்பு அதிகாரியாக (பொறுப்பு) இருப்பவர் முருகேசன். இவர் தனது குடும்பத்துடன் கே.கே.நகர் எல்.ஐ.ஜி. காலனியில் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி காலை முருகேசன் வண்டியூரில் வாக்கிங் போனார். அப்போது சிலர் அவரை வேன் மூலம் கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அன்று இரவு அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு வந்தார் முருகேசன்.

சிலர் தன்னை தலை முழுவதையும் ஒரு துணியால் கட்டி கடத்திச் சென்று வேனிலேயே வைத்திருந்து, பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு, நாகமலை புதுக்கோட்டையில் இறக்கி விட்டுவிட்டதாக கூறினார்.

இருப்பினும் அவரது பேச்சை நம்பாத போலீஸார் தனிப்படை அமைத்து இதுதொடர்பாக விசாரணையில் இறங்கினர்.

இந்த விசாரணையில் தற்போது ஒரு கும்பல் முருகேசனை கடத்திச் சென்று அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்ட பின்னர் விடுவித்தது தெரிய வந்தது.

முருகேசனின் சொந்த ஊர் தேனி மாவட்டம் காமயக் கவுண்டன்பட்டியாகும். அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சிவனாண்டியின் மகன் மனோகரன் (28). இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்கு செலவுகளுக்காக அவருக்கு பணம் தேவைப்பட்டது. பெரும் பணக்காரரான முருகேசனை கடத்தி, அதன் மூலம் பணம் பெற திட்டமிட்டார்.

இதையடுத்து மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்த பூ வியாபாரி அருணா, ஆரப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணன், வாடகை கார் டிரைவர் செந்தில், கம்பத்தை சேர்ந்த ஜோதி ஆகியோர் உதவியுடன் கடத்தல் திட்டத்தை வகுத்தார்.

சம்பவத்தன்று அதிகாலை 5 மணி அளவில் அவர்கள் வேனுடன் வந்தனர். வாக்கிங் முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த முருகேசனை அந்தக் கும்பல் தலையை துணியால் மூடி வேனுக்குள் தள்ளி கடத்தியது.

கூடலூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய அவர்கள், ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம். இல்லாவிட்டால் கொலை செய்து பிணத்தை கொடைக்கானல் மலையில் இருந்து வீசிவிடுவோம் என்று மிரட்டியுள்ளது.

பயந்து போன முருகேசன், தனது உதவியாளர் கணேசனைத் தொடர்பு கொண்டு பணத்துடன் வரும்படி கூறியுள்ளார்.
அவர் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு பணத்தை வாங்கிக் கொண்ட மனோகரன் உள்ளிட்டோர் முருகேசனை விடுவித்து விட்டுச் சென்று விட்டனர்.

மனோகரன் நேற்று தனிப்படை போலீசாரின் பிடியில் வசமாக சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்படி, டிரைவர்கள் கணேசன், செந்தில், அடியாட்களான கூடலூரை சேர்ந்த கலையரசன், சிவமுனியாண்டி ஆகியோரும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

அருணா, ஜோதி மற்றும் அவர்களுடன் வந்த அடியாட்களுக்கு தற்போது போலீஸார் வலை வீசியுள்ளனர்.

அதிகாரி முருகேசன் திரும்பி வந்த அன்றே போலீஸாரிடம் நடந்ததைக் கூறாமல் மறைத்து விட்டதால், குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+