ஜெயலலிதாவும், மைசூர் மகாராஜா தந்த ஒட்டியாணமும்..கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு "முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம்'' என்று பெயர் சூட்டவும், அதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருப்பதாகவும் தனக்கு செய்திகள் வந்திருப்பதாகவும், எழுதியிருக்கிறார்.
அவரது அவசரத்தனத்திற்கும் அறியாமைக்கும் எடுத்துக்காட்டாகத்தான் அந்த அறிக்கையும் எழுதப்பட்டுள்ளது. 13ம் தேதி துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் அழைப்பிதழை உடனடியாக எடுத்து வரச்செய்து பார்த்தேன். அந்த அழைப்பிதழில் எந்த இடத்திலும் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பேருந்து நிலையம் திறப்பு விழா என்று குறிப்பிடப்படவே இல்லை. ராதாபுரம் பேருந்து நிலையம் துவக்க விழா என்றுதான் அச்சிடப்பட்டுள்ளது.
ராதாபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அரசின் சார்பில் இதுவரை எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
நான் மாவட்ட ஆட்சித் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் பெற்றோர் பெயரை பேருந்து நிலையத்திற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் சூட்ட வேண்டாமென்றும், அவர்களது சிலையைத் திறக்க வேண்டாமென்றும் உறுதியாகத் தெரிவித்து விட்டேன்.
ஆனால், ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் என்பவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்கள்? எந்தத் துறையில் சிறந்து விளங்கினார்கள்? என்பதை அறியும் பொருட்டு, வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தும் அவர்களைப் பற்றிய எந்தவிதமான தகவலையும் அறிந்துகொள்ள முடியவில்லை என்று எழுதியிருக்கிறார்.
எனது பெற்றோர்களான அவர்கள் இந்த நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்க என்னை வழங்கியிருக்கிறார்களே, அதுவே அவர்கள் செய்த தியாகம்தான்!.
ஆனால், வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் அம்மையார் ஜெயலலிதா செய்த தியாகங்கள் பற்றியும், அவர் எந்தத் துறையிலே சிறந்து விளங்கினார் என்பதைப் பற்றியும் பக்கம் பக்கமாக காண முடியும். வரலாற்றுப் புத்தகங்கள் ஏன்? முதலில் சட்டமன்ற நடவடிக்கை குறிப்புகளை புரட்டிப் பார்த்தாலே போதுமே; இதோ சில உதாரணங்கள்:
'டாக்டர் புரட்சி தலைவி ஜெ போக்குவரத்து கழகம்':
- தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளைக் கொண்டு "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்'' என்ற பெயரால் புதிய போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்படும் (6.4.1993)
- அம்பத்தூரில் சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் தொழில்நுட்பப் பயிலகத்திற்கு 6 கோடி மக்களால் ஆராதனை செய்யப்படும் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி பெயரினையே சூட்டிட வாரியம் முடிவெடுத்துள்ளது. (8.4.1994)
- "ஜெ. ஜெ. ஹேண்ட்லூம் டவர்'' (8.4.1994)
- "புரட்சித் தலைவி சீர்மிகு உயர் பள்ளி'' (19.4.1994)
- ''புரட்சித் தலைவி'' திருப்பெயரால் மகளிருக்கான டாக்டர் ''புரட்சித் தலைவி பொற்கோப்பை கால்பந்துப் போட்டி'' நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவிருக்கிறது. (19.4.1994)
- "முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி'' பெயரில் தமிழகத்தில் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் (19.4.1994)
சமுதாய கூடங்களுக்கு புரட்சித் தலைவி பெயர்:
-சிறந்த விளையாட்டு அணியினருக்கு முதல்வர் ''புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா'' பெயரில் சிறந்த வேலைப் பாடுகள் அடங்கிய சுழற்கோப்பை (10.4.1994).
-அனைத்துச் சமுதாய நலக் கூடங்களுக்கு, புரட்சித் தலைவி பெயர் சூட்டப்படும். (26.4.1994)
- தமிழகத்திலே இருக்கிற அனைத்து நகராட்சிகளிலும், நவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபங்கள் ''இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி'' பெயரிலே கட்டப்படும். (26.4.1994)
- ''புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா'' என்ற பெயரில் அழகு உலா ரதங்கள் இரண்டு இந்த ஆண்டு விடப்படும். (27.4.1994)
- திராவிட இனத்தினுடைய தன்மானத் தலைவியாக இருக்கிற ''டாக்டர் புரட்சித் தலைவி திருப்பெயர்'' வன உயிரின உய்விடத்திற்கு சூட்டப்படும். அதுபோன்று அங்கே அமைந்திருக்கின்ற தேசியப் பூங்கா, "டாக்டர் ஜெ. ஜெயலலிதா தேசியப் பூங்கா, முதுமலை'' என்று இன்று முதல் அழைக்கப்படுகிறது. (26.4.1994)
- செங்கை- எம்.ஜி.ஆர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கட்டிடத்திற்கு "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா'' என்கிற திருப்பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. (30.4.1994)
"டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெ. மாளிகை'':
- 60 லட்சம் ரூபாய் செலவில் கோவையில் எழுப்பப்பட்டு முடிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு "டாக்டர் புரட்சித் தலைவி ஜெ.ஜெ. மாளிகை'' என்னும் திருப் பெயர் சூட்டப்படுகிறது. (30.4.1994)
- சென்னை திரைப்பட நகருக்கு திரை உலக வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவரான ''இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி பெயரால் ஜெயலலிதா திரைப்பட நகர்'' என பெயர் சூட்டப்படும்.
- "ஜெ.ஜெ. 92'' என்ற புதிய வகை வாசனை அரிசியை அறிமுகம் செய்திருக்கிறோம். விஞ்ஞான தொழில் நுட்பங்களை வழங்கும் விரிவாக்க அலுவலர்களுக்கு "டாக்டர் புரட்சித் தலைவி விருது'' உருவாக்கியுள்ளோம்.
மேலும் "டாக்டர் புரட்சித் தலைவி தென்னை வளர்ச்சித் திட்டம்'' அமலாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. (19.4.1995)
- ஆடு, கோழி, முயல் போன்றவைகள் வளர்க்கப்படும் "டாக்டர் புரட்சித் தலைவி மகளிர் கால்நடை கூட்டுறவுச் சங்கம்'' துவக்குவதை இத்துறை பெரும் பேறாக நினைக்கிறது. (19.4.1995)
- முதல்அமைச்சர் ''இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி ஆன்மீகக் கல்வித் திட்டம்''.
- ''புரட்சித் தலைவி நல்லாசிரியர் விருது'' வழங்கும் திட்டம்.
- "புரட்சித் தலைவி ஆய்வுப் பெருந்தகையாளர் ஊக்குவிப்புத் திட்டம்''
இப்படியெல்லாம் பெயர் சூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது- அந்த விமர்சனங்களையெல்லாம் கேட்டு புளகாங்கிதமடைந்து அமர்ந்திருந்த ஜெயலலிதா; தற்போது எனது பெற்றோர்களின் பெயர்களை ஒரு கிராம ஊராட்சிப் பேருந்து நிலையத்திற்கு- அதுவும் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் தனது சொந்தப் பொறுப்பில் கையிலிருந்து பணம் கொடுத்து வாங்கிக் கொடுத்துள்ள இடத்தில்- அவரது விருப்பத்தின் பெயரில்- என்னுடைய பெற்றோர்கள் பெயரை வைக்க விரும்பி- அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு, அதுவும் வெற்றி பெறாத நிலையில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேருந்து நிலையம் திறக்கப்படுகின்ற போது- என்னுடைய பெற்றோர்களைப் பற்றி வரலாற்றுப் புத்தகங்களிலே தேடிப் பார்த்ததாக கிண்டல் செய்து அறிக்கை விடுகிறார் என்றால், அவரைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள்தான் எடை போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவர் இருந்த உலகம் வேறு:
ஜெயலலிதாவுக்கு என்னுடைய பெற்றோரை தெரிந்திருக்க நியாயமில்லைதான்! ஏனென்றால் அவர் இருந்த உலகம் வேறு. ஆனால் என் அன்னை மறைந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா எழுதிய வாசகங்களில் ஒரு பகுதி இதோ:
"குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஓர் புன்னகை! மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சருகு, தளிர் ஆவது போலாகி விடுவார்கள்- தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல- மாடு மனை கண்டு அல்ல- உற்றார் உறவினர் கண்டு அல்ல- இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்!.
கண்டவுடன், மேயர் நம்ம கட்சி தானே வரும்? அதைவிடக் கூடாது! புதுசா சட்டம் வருதாமே? பேப்பர்லே இன்னக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்கிறது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே, பாத்தீங்களா? என்ன செய்யப் போறீங்க? என்று இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான் "நிதி'' என்ற பெயரிட்டார்கள் போலும்!.
இப்படிப்பட்ட மகனுக்கு வேறு விதத்திலே மனப்பான்மை கொண்ட தாய் அமைந்திருந்தால்? பொது வாழ்வு புகைச்சல் நிரம்பியதாகிவிடும். கருணாநிதிக்கு வீட்டிலே கிடைத்த தாயின் புன்னகையும் அன்பும் பொது வாழ்க்கையில் புன்னகையுடன் ஈடுபட பெரிய வாய்ப்பினை அளித்தது என்பதை உணருகிறேன்.
குயில் பறந்துவிட்டது, நாதம் நிலைத்திருக்கிறது- மலர் உதிர்ந்து விட்டது, மணம் நிரம்பி இருக்கிறது- அஞ்சுகம் மறைந்து விட்டார்கள், அவர்கள் பற்றிய நினைவு நிலைத்திருக்கிறது.''
பேரறிஞர் அண்ணா மட்டுமல்ல, அந்த நூலில் எம்.ஜி.ஆர்., நாவலர், பேராசிரியர், நடிகர் திலகம் சிவாஜி, சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், ஏ. கோவிந்த சாமி, சத்திய வாணிமுத்து, எஸ்.எஸ். ஆர்., அலமேலு அப்பாதுரையார், பொற்செல்வி இளமுருகு மற்றும் பலர் என் அன்னையைப் பற்றி எழுதி அது ஒரு சிறு நூலாகவே வெளி வந்துள்ளது.
மகாராஜா வழங்கிய ஒட்டியாணம்..
ஆனால்; மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை ஜெயலலிதா புரட்டிப் புரட்டி பார்த்திருப்பாரே தவிர; நான் குறிப்பிடும் நூலைப் பார்க்கவோ படிக்கவோ அவருக்கு நேரம் ஏது?.
இவ்வாறு கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications