கைதியால் நடந்ததா ரயில் விபத்து?: சிபிஐ விசாரணை-மமதா
மதுரா: மதுரா ரயில் விபத்து சம்பவத்தில் கிரிமினல் குற்றச் செயல்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த முடிவெடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மதுராவில் இரு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து நடந்த இடத்தை மமதா பானர்ஜி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்தின் ஆழத்தைப் பார்க்கும்போது, இதை சிபிஐ விசாரிப்பதே சிறப்பானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
இந்த விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து சிலர் விபத்தை ஏற்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சிக்னல் பிரச்சினை காரணம் என சிலர் கூறுகின்றனர். கிரிமினல் குற்றச் செயலுக்கான வாய்ப்புகளும் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து என்றார் மமதா.
விசாரணைக் கைதியால் விபத்து..
இந்த நிலையில், மேவார் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து விசாரணைக் கைதி குதித்து தப்ப முயன்றதால் போலீஸார் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால்தான் பின்னால் வந்த கோவா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் இருந்து முன்னா சாஜித் என்ற விசாரணை கைதியை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் மேவார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழைத்து வந்தனர். ரெயில் மதுரா அருகே வந்தபோது அவன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் ரெயில் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தினர்.
இதனால் மேவார் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், வேகமாக வந்த கோவா எக்ஸ்பிரஸ், எதிர்பாராத வகையில் நின்று கொண்டிருந்த மேவார் மீது மோதி விட்டது.
இதற்கிடையே, நேற்று மாலை விபத்துக்குள்ளான ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் உயிருடன் இருந்த இரண்டரை வயதுக் குழந்தையை ராணுவத்தினர் மீட்டனர்.
அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் யார் என்பது தெரியவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. அந்தக் குழந்தை தற்போது மதுரா ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications