போர்க் குற்றம்: சர்வதேச விசாரணைக்கு இலங்கை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா

ஈழப் போரின் இறுதி நாட்களில் தமிழர் பகுதிகளில், குறிப்பாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த பகுதிகளில் மிகப் பெரிய அளவுக்கு மனிதப் படுகொலைகள் நடந்தேறின. ஆயிரக்கணக்கான தமிழர்களை குண்டுகளை வீசி கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.
கொல்லப்பட்டவர்களை புல்டோசர்களை வைத்து மண்ணோடு மண்ணாக மறைத்து விட்டதாகவும், பல நூறு பேரை உயிரோடு புல்டோசர்களை ஏற்றிக் கொன்று குவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
பெரும் குவியலாக தமிழர்கள் புதைக்கப்பட்ட இடங்களின் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமீபத்தில், பிடிபட்ட விடுதலைப் புலிகளை நிர்வாணப்படுத்தி, அவர்களை ஈவு இரக்கமே இல்லாமல் இலங்கை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கோரக் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியது.
இந்த வீடியோ நிஜமானதுதான், திருத்தப்பட்டதில்லை என்று சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச அளவிலான, விரிவான, சுதந்திரமான விசாரணைக்கு இலங்கை அனுமதிக்க வேண்டும், தமிழர் பகுதிகளுக்கு இந்த விசாரணைக் குழுவினர் செல்ல அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசு கிட்டத்தட்ட கண்டிப்பு கலந்த குரலில் கோரியுள்ளது அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி கூறுகையில், சர்வதேச அளவிலான விசாரணைக் குழுக்கள், இலங்கையில் போர்க்குறம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிய இவர்களுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்.
போர்க்குறம் தொடர்பான விசாரணைகளின் முதல் படியாக இது அமையும். எனவே சர்வதேச அமைப்புகள் விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
போருக்குப் பிந்தைய மறு வாழ்வு நடவடிக்கைகளில் உண்மையிலேயே இலங்கை அரசுக்கு அக்கறை இருந்தால், இந்த விசாரணைக்கும் அது ஒத்துழைக்க வேண்டும். திறந்த மனதுடன் அனுமதி அளிக்க வேண்டும். தவறு செய்த, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடந்த மனிதப் பேரவலம், போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியுறவுத்துறை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில்,
தமிழர் பகுதிகளில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசு சாரா அமைப்புள், மீடியா நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்களை நம்மால் இங்கிருந்தபடி பரிசோதிக்க முடியாது. ஆனால் அவை அனைத்தும் நம்பகமானவை என்பதில் சந்தேகம் இல்லை.
விடுதலைப் புலிகள் சிறார்களை போர் வீரர்களாக பயன்படுத்தியுள்ளனர். அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியுள்ளனர்.
அதேபோல, அரசுப் படையினர் தமிழ் மக்கள் அதிகம் இருந்த பகுதிகளில் வேண்டும் என்றே குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தற்போது இடம் பெயர்ந்த முகாம்களிலும் கூட அடிப்பட மனிதாபிமான உதவிகள் கிடைக்காத நிலையில் அப்பாவி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போரின் இறுதி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல்களா என்ற ஆய்வுக்கு அமெரிக்க அரசு போக விரும்பவில்லை.
அதேசமயம், இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க அரசு விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications