முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் முதல்வரை இவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை சார்பில் தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி இன்று நடந்தது.
தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்த வேண்டும், பாதாளச் சாக்கடைகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, வெட்டியான்களை 'மயான உதவியாளர்கள்' என பெயர் மாற்றம் செய்து உள்ளாட்சி ஊழியர்களாக்க வேண்டும்; ஆலயங்களில் தலித்துக்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை மன்றோ சிலையில் துவங்கி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே பேரணி முடிவடைந்தது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் கே.வரதராஜன், சிஐடியூ மாநில பொதுச் செயலர் செளந்தரராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், எம்எல்ஏக்கள் பாலபாரதி, மகேந்திரன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக கூட்டணியிலிருந்து சிபிஎம் வெளியே வந்தது. இதையடுத்து முதல்வரை அவர்கள் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.வரதராஜன்,
தமிழகத்தில் பல இடங்களில் இன்னமும் தீண்டாமை நிலவுகிறது. குடியார்த்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ லதா தலைமையில் தலித் மக்கள் கோயிலில் நுழையும் போராட்டம் நடத்தியபோது காவலர்கள் அவரை அடித்து படுகாயப்படுத்தினார்கள்.
பூட்ஸ் காலால் மிதித்து தாக்கியதால் அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிபந்தனை ஜாமீன்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
இன்னும் பல பகுதிகளில் இரட்டை டம்ளர் முறை அமலில் உள்ளது. கிராமப்புற பகுதிகளில், மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவலநிலையும், மலக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் நிலையும் உள்ளது.
நகர் பகுதிகளில்தான் எந்திரங்கள் வந்துள்ளன. இதே போல எல்லா பகுதிகளிலும் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளித்து அது பற்றி விளக்கினோம். அதை கேட்டுக் கொண்ட முதல்வர் ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications