பெரியாறு அணை பூகம்பத்தைத் தாங்காது- கேரளா நியமித்த ஐஐடி நிபுணர்கள் பேச்சு
திருவனந்தபுரம்: தாங்கள் நடத்திய பூகம்பம் தொடர்பான ஆய்வு முடிவை தமிழக அரசு நிராகரித்திருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர், கேரள அரசால் நியமிக்கப்பட்ட ஐஐடி நிபுணர்கள்.
முல்லைப் பெரியாறு அணையைத் தூக்கி விட்டு புதிய அணை கட்டுவதற்காக ஏகப்பட்ட வேலைகளி்ல் இறங்கியுள்ளது கேரள அரசு. அதில் ஒன்றுதான் ரூர்கி ஐஐடியைச் சேர்ந்த சிலரை வைத்து பெரியாறு அணை பூகம்பத்தைத் தாங்குமா என்ற சோதனை.
அந்த சோதனையை நடத்தி பால் தலைமையிலான குழுவினர், 136 அடி நீரைத் தேக்கி வைத்தாலும் கூட பூகம்பம் ஏற்பட்டால் அணை தாங்காது என்ற அறிக்கையைக் கொடுத்துள்ளனர். இதை தமிழக அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
ஆனால் இதை ரூர்கி நிபுணர் குழு ஆட்சேபித்துள்ளது. இதுகுறித்து குழுவுக்குத் தலைமை தாங்கிய பால் கூறுகையில், எங்களது அறிக்கை தவறு என்று தமிழ்நாடு கூறுமானால், அதை பாயின்ட், பான்ட்டாக நிரூபிக்க அது முன்வர வேண்டும். எங்களது அறிக்கையில் என்ன தவறு என்பதை அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல ஐஐடி டெல்லியைச் சேர்ந்த கோசியன், சுபாஷ் சந்தர் ஆகியோரையும் வைத்து ஒரு ஆய்வை நடத்தியது கேரளா. இந்தக் குழுவும், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் அதில் தொடர்ந்து நீர் தேக்கி வைக்கப்பட்டால் அணை தாங்காது என்றும் கூறியுள்ளது. இதையும் தமிழக அரசு நிராகரித்து விட்டது.












Click it and Unblock the Notifications