மீனவர்கள் கடத்தல்: பெரும் போராட்டம் நடத்துவோம்- திருமா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியக் கடலிலே ஓரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்துக் கடத்தி சென்றுள்ளனர்.
சர்வதேச எல்லையைத்தாண்டி இந்திய எல்லைக்கள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்துச் சேதப்படுத்தியுள்ளனர். பிடித்து வைத்துள்ள மீன்களையும் அவர்தம் 5 படகுகளையும் கைப்பற்றியதுடன் மீனவர்களையும் தாக்கி கைது செய்துள்ளனர்.
சிங்களர்களுடன் கூடிக் குலாவும் ஆட்சியாளர்கள்..
சிங்களக் காடையர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர் கதையாக நீடித்து வருகின்றன. இந்திய ஆட்சியாளர்கள் சிங்களக் காடையர்களோடு கூடிக் குலாவுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1983லிருந்து தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பல் நடத்தி வரும் துப்பாக்கி சூடு மற்றும் கைது நடவடிக்கைகளை இந்திய அரசு ஒரு முறைகூடக் கண்டித்ததே இல்லை. தமிழக மீனவர்களையும் அவர்தம் மீன் பிடிக்கும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் துளியளவில் முனைப்புக்காட்டியதேயில்லை.
தற்போதும் அதே மெத்தனமான போக்கையே இந்திய அரசு கடை பிடித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடத்தப்பட்டு 2 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை இல்லாவிட்டாலும் இந்திய இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவாவது இந்திய ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
சர்வதேசக் கடல் எல்லையைத்தாண்டி இந்திய கடல் எல்லைக்குள் சிங்களக் காடையர்கள் அத்துமீறி நுழைவதை இந்திய அரசு எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?
இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. கடத்தப்பட்ட 18 மீனவர் களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூக தலைவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் விடுதலைச்சிறுத்தைகள் முன்னின்று மாபெரும் போராட்டத்தை நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
விசி அலுவலக இடிப்பு சட்டப்பூர்வமானதே
இந் நிலையில் சென்னை அசோக் நகர் 100 அடி ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் சட்டப்பூர்வ நடவடிக்கை என்றும், அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அசோக் நகரில் 100 அடி ரோட்டில் உள்ள பிளாட் ஏ 4 ஏ எண்ணில் உள்ள வீட்டு மனைக்கு உரிமை கொண்டாடி கே.வி.சிவராம் பிரசாத் என்பவர் விடுதலைத் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
மேற்படி இடத்தில் விடுதலைத் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்மண் பத்திரிகை அலுவலகமும் இயங்கி வந்தது. இந்த வழக்கில் 23.07.2009 அன்று சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக மேற்படி சொத்தானது சிவராம் பிரசாத் வகையறாவுக்கு சொந்தமானது என்றும் உத்தரவிட்டது.
அந்த இடத்தில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அவர்களை 2 வார காலத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆணையை தடை செய்யக்கோரி விடுதலைத் சிறுத்தைகள் கட்சி வேதா அருண் நாகராஜன் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். பின்னர் அவரே விசாரணை தேவையில்லை என்று திரும்ப பெற்றுக் கொண்டார். ஐகோர்ட்டில் தொடரப்பட்ட 2 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு தாங்கள் கட்டியிருந்த கட்டிடங்களில் உள்ள ஜன்னல், கதவு உள்பட அனைத்து பொருட்களையும் பெயர்த்து எடுத்து சென்றுவிட்டனர்.
நீதிமன்ற ஆணையின்படி சட்ட வல்லுநர்களின் கருத்தை பெற்று மேற்படி இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை தன்வசம் எடுத்துக் கொண்டார்.
நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க எடுக்கப்பட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு அரசியல் சாயமோ அல்லது உள்நோக்கமோ கற்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் கமிஷ்னர்.












Click it and Unblock the Notifications